சென்னை: “மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து அரசியலுக்கு வந்தபோது நானும் உச்ச நடிகர்தான். அதிகமான ரசிகர்கள் இருந்த நேரத்திலும், பெரிய பெரிய வெற்றிப் படங்களைக் கொடுத்தபோதுதான் நானும் அரசியலுக்கு வந்தேன். அதற்கு காரணம் மக்கள் சேவைதான்,” என்று சரத்குமார் கூறியுள்ளார்.
சென்னையில் பாஜகவைச் சேர்ந்த சரத்குமார் இன்று (நவ.15) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “1996-ம் ஆண்டு தமிழகத்தில், இருந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியை எதிர்த்து, தனிமனிதனாக அரசியலுக்கு வந்தேன். அன்றைக்கு யாருக்கு அந்த தைரியமும், திராணியும் கிடையாது. அந்த சமயத்தில், தவெக தலைவர் விஜய் கூறுவது போல உச்ச நடிகர்தான் நானும். மிகப் பெரிய ரசிகர்கள் இருந்தனர். அதிகமான ரசிகர்கள் தியேட்டருக்கு ஒரு படத்தைப் பார்த்தது என்றால், அது என்னுடைய படத்தைத்தான். அந்த சமயத்தில்தான் நான் அரசியலுக்கே வந்தேன்.