சென்னை: அரசின் முயற்சியால் தொழிலாளர்களின் கோரிக்கைகள் சாம்சங் நிறுவனத்தால் ஏற்கப்பட்டது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது;
“சாம்சங் நிறுவனத்தில் நடைபெற்று வந்த தொழிலாளர்கள் மற்றும் நிர்வாகத்தினருக்கு இடையேயான பிரச்சினைகளுக்கு இணக்கமானதொரு தீர்வு காணப்பட்டதில் மகிழ்ச்சி!
இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உறுதுணையாக இருந்து ஒத்துழைத்த C.I.T.U. தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும், தொழிலாளர்கள் அனைவருக்கும், சாம்சங் நிறுவனத்தின் நிர்வாகிகளுக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளும் நன்றியும்!
பல கட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தி, நல்ல முடிவுக்குக் கொண்டுவர, சிறப்பான முயற்சிகளை மேற்கொண்ட மாண்புமிகு அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன், டி.ஆர்.பி.ராஜா ஆகியோருக்கும் எனது பாராட்டுகள்! நன்றி!
திராவிட முன்னேற்றக் கழக அரசானது என்றும் தொழிலாளர் நலனை முன்னிறுத்திப் பாடுபடும் அரசு! அந்த நிலைப்பாட்டில் இருந்து அது என்றும் மாறாது; தொடர்ந்து செயலாற்றும்.
‘நடந்தவற்றை நம்மைக் கடந்தனவாகக்’ கருதி, அவற்றை நாம் பின்தள்ளி, ஒரு புதிய துவக்கத்திற்காக, வளமான எதிர்காலத்தை நோக்கி முன்னேறிச் செல்ல, சாம்சங் நிறுவனத் தொழிலாளர்கள் மற்றும் நிர்வாகத்தினரைக் கேட்டுக்கொண்டு அன்போடு அனைவரையும் வாழ்த்தி மகிழ்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
The post அரசின் முயற்சியால் தொழிலாளர்களின் கோரிக்கைகள் சாம்சங் நிறுவனத்தால் ஏற்கப்பட்டது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.