அரசின் நலத்திட்டங்களைச் சிறப்பாக செயல்படுத்திட பங்குத்தொகையை குறிப்பிட்ட காலத்திற்குள் விடுவிக்க வேண்டும்: ஒன்றிய அமைச்சர் அன்னபூர்ணா தேவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

3 hours ago 1

சென்னை: தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்திட ஒன்றிய அரசின் பங்குத் தொகையை, குறிப்பிட்ட காலத்திற்குள் விடுவித்திட வேண்டும் என்று ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவிக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

ஒன்றிய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சரின் 31-01-2025ம் நாளிட்ட கடிதத்தில், திறன்மிகு குழந்தைகள் மையம், மகளிர் சக்தி இயக்கம் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சேவைகள் திட்டம் போன்ற ஒன்றிய அரசின் நிதியுதவி திட்டங்களுக்கு, 29-1-2025ம் நாள் நிலவரப்படி ரூ.716.05 கோடி செலவழிக்கப்படாமல் உள்ளது என தெரிவித்துள்ளீர்கள். தமிழ்நாட்டில் அனைத்து நலத்திட்டங்களும் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருவதுடன், ஒன்றிய அரசு நிதியுதவி வழங்கும் திட்டங்களுக்கு மாநில அரசின் பங்களிப்பு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முறையாக வழங்கப்பட்டு வருகிறது.

பெரும்பாலான நேர்வுகளில், ஒன்றிய அரசின் நிதிப்பங்கு காலாண்டின் இறுதியிலோ அல்லது அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டிலோ மட்டுமே வழங்கப்படுகிறது. நிதியாண்டின் முடிவிற்குள் ஒன்றிய அரசு ஒதுக்கும் தொகையை மேற்குறிப்பிட்ட திட்டங்களுக்குக் குறுகிய காலத்திற்குள் பயன்படுத்த இயலாத நிலை உள்ளது. பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா என்னும் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள 304 கோடி ரூபாயில், ஒன்றிய அரசின் பங்குத் தொகையான 184 கோடி ரூபாய் இதுநாள் வரை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் உரிய காலத்தில் வரவு வைக்க இயலாமல் உள்ளது.

இன்றைய தேதியில், ஒற்றை ஒருங்கிணைப்பு முகமை கணக்குகளில் உள்ள 576.22 கோடி ரூபாயில், இந்த நிதியாண்டு முடிவதற்குள் ரூ.482.80 கோடி பயன்படுத்தப்படும். மீதமுள்ள தொகை ஒன்றிய அரசின் பங்காக அடுத்த நிதியாண்டுக்குக் கொண்டு செல்லப்படும். இந்நிலையில், தமிழ்நாடு அரசின் நல திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்திட ஏதுவாக, ஒன்றிய அரசின் திட்டங்களுக்கான பங்குத் தொகையை, குறிப்பிட்ட காலத்திற்குள் அதாவது அந்தந்த நிதியாண்டுக்குள்ளேயே விடுவித்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post அரசின் நலத்திட்டங்களைச் சிறப்பாக செயல்படுத்திட பங்குத்தொகையை குறிப்பிட்ட காலத்திற்குள் விடுவிக்க வேண்டும்: ஒன்றிய அமைச்சர் அன்னபூர்ணா தேவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.

Read Entire Article