அரசனை போல வாழ்வு தரும் சாமர யோகம்!

1 day ago 3

நீடித்த பொருளாதாரம் வருவாயுடன் உள்ள சக்கரவர்த்தி போன்று வாழ வேண்டும் என்ற திண்ணம் எல்லோருக்கும் உண்டு. அதற்கான அமைப்பு இருந்தால்தான் அந்த யோகம் உங்களை நாடும். நீங்களும் யோகத்தை ேநாக்கியே பயணிப்பீர்கள் என்பதே உண்மை. அப்படிப்பட்ட நீடித்த பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் மதிப்பு, மரியாதையுடன் மூன்று – நான்கு தலைமுறைகளுக்கு மேல் உள்ள யோக அமைப்பே இந்த சாமர யோகம் என்று சொல்லப்படுகிறது. இது ராஜயோகங்களில் ஒன்றாகச் சிறப்பாகச் சொல்லப்படுகிறது. ஜாதகரும் அந்தப் பொருளாதாரத்தை திறம்பட கையாளும் திறமை பெற்றவனாக இருப்பான். மேலும், நீடித்த ஆயுள், ஆரோக்கியம் உள்ளவனாகவும் இருப்பான். பாமரனாக இருந்தாலும் சாமரம் யோகம் உயர்வு தரும்.

சாமர யோகத்திற்கான அமைப்புகள் என்ன?

பிறப்பு ஜாதகத்தின் லக்னமானது சூரியனிலிருந்து ஆறு பாவத்திற்குள் இருக்க வேண்டும். அதாவது, ஜாதகர் பகல் பொழுதில் ஜனனம் அடைந்திருக்க வேண்டும். சந்திரன் வளர்பிறை சந்திரனாக இருக்க வேண்டும். அதாவது, சூரியனுக்கு 2, 3, 4, 5, 6 ஆகிய இடங்களில் சந்திரன் இருப்பது. மேலும், ஜாதகர் எந்த லக்னத்தில் ஜனித்தாலும் லக்னாதிபதி உச்சம் அமைப்பை பெற்றிருக்க வேண்டும். உங்கள் லக்னத்திற்கோ அல்லது லக்னாதிபதிக்கோ கேந்திரம் எனச் சொல்லக்கூடிய 1, 4, 7, 10ம் பாவங்களில் வியாழன் இருக்க வேண்டும். இதுவே சாமர யோகம் என ஜோதிட சாஸ்திரம் வலியுறுத்துகிறது.

சாமர யோகத்தின் பலன்கள்

*நீண்ட ஆயுளைத் தரும் அமைப்பாக உள்ளது.

*கௌரவம் மற்றும் சமூகத்தில் தனித்துவமாக விளங்கும் அமைப்பாகவும் எப்பொழுதும் முன்னேற்றத்தை நோக்கி பயணிக்கும் அமைப்பையும் தருகிறது.

*ஆளும் அதிகாரத்தையும் அல்லது ஆளும் அதிகாரத்தின் வட்டத்திற்குள் இருக்கும் அமைப்பாக இருக்கும்.

*இவருடன் பயணிக்கும் அனைவரும் உயர்ந்த அந்தஸ்திலும் அதிகாரத்திலும் பயணிக்கக் கூடியவர்கள்.

*இவர் ஈட்டிய பொருளாதாரத்தை அனுபவிக்கும் யோகம் உள்ளவராக இருப்பார்.

*இவரைச் சுற்றி நட்புடனும் அறிவுடனும் கூடிய ஆட்கள் அதிகம் இருப்பர்.

*எப்பொழுதும் முன்னேற்றத்தை நோக்கியே பயணிக்கக்கூடியவர். தோல்வி வந்தாலும் தோல்வியைப் பற்றி சிந்திக்காதவர்.

*பொருளாதாரத்தை கையாளும் திறம் படைத்தவராக இருப்பார்கள்.

*இவர்கள் எப்பொழுதும் வெற்றி பெற்றுக் கொண்டே இருப்பதே மற்றவர்களுக்கு ஆச்சர்யமாக இருக்கும். மற்றவர்களை பார்த்து பொறாமைப் படுபவராக இருப்பார்.

*இவர்களின் பேச்சு எப்பொழுதும் மற்றவர்களை கவர்ந்திழுக்கும் தன்மை உடையதாக இருக்கும்.

*சாமர யோகம் உள்ளவர்களை மற்றவர்கள் தோற்கடிக்க முயற்சிப்பார்கள். ஆனால், ஏதும் செய்ய இயலாது என்பதுதான் லக்னாதிபதியின் வலிமை.

லக்னத்தின் அடிப்படையில் சாமர யோகம்

எல்லா லக்னங்களுக்கும் லக்னம், சூரியன் மற்றும் சந்திரன் 2 முதல் 6 பாவங்களுக்குள் கேந்திரமாகவும் சந்திரன் வளர்பிறையாகவும் இருக்க வேண்டும்.

*சர லக்னமான மேஷ லக்னத்திற்கு – செவ்வாய் மகரத்தில் உச்சம் பெற்றிருக்க வேண்டும். வியாழன் கடகத்திலோ அல்லது லக்னத்திலோ இருக்க வேண்டும். இது மஹா சாமர யோக அமைப்பாகும். இவரை வெல்வது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும்.

*ஸ்திர லக்னமான ரிஷபத்திற்கு – லக்னாதிபதி சுக்ரன் மீனத்தில் உச்சம் பெற்றிருக்க வேண்டும். வியாழன் சிம்மத்திலோ அல்லது மிதுனத்திலோ இருப்பது சிறப்பு.

*உபய லக்னமான மிதுனத்திற்கு – லக்னாதிபதி கன்னி அமர்ந்து ஆட்சி உச்சம் பெற்றிருக்க வேண்டும். வியாழன் கன்னியிலோ அல்லது தனுசிலோ அமர்ந்திருக்க வேண்டும்.

*சர லக்னமான கடகத்திற்கு – லக்னாதிபதி ரிஷபத்தில் உச்சம் பெற்றிருக்க வேண்டும். வியாழன் விருச்சிகத்திலோ அல்லது துலாம் ராசியிலோ அமர்ந்திருக்க வேண்டும்.

*ஸ்திர லக்னமான சிம்மத்திற்கு – லக்னாதிபதி மேஷத்தில் அமர்ந்து உச்சம் பெற வேண்டும். வியாழன் கடகம் அல்லது விருச்சிகத்தில் அமர்ந்திருக்க வேண்டும்.

*உபய லக்னமான கன்னிக்கு – லக்னாதிபதி லக்னத்தில் அமர்ந்து உச்சம் பெற வேண்டும். வியாழன் தனுசிலோ அல்லது மிதுனத்திலோ இருக்க வேண்டும்.

*சர லக்னமான துலாத்திற்கு – லக்னாதிபதி மீனத்தில் இருக்க வேண்டும். வியாழன் கடகத்திலோ அல்லது லக்னத்திலோ இருக்க வேண்டும்.

*ஸ்திர லக்னமான விருச்சிகத்திற்கு – செவ்வாய் மகரத்தில் இருக்க வேண்டும். வியாழன் மேஷத்திலோ அல்லது கும்பத்திலோ இருக்க வேண்டும்.

*உபய லக்னமான தனுசிற்கு – வியாழன் கடகத்தில் அமர்ந்து உச்சம் பெற வேண்டும். அவ்வாறு உள்ள வியாழன் வக்ர அமைப்பில் இருக்க வேண்டும்.

*சர லக்னமான மகரத்திற்கும் ஸ்திர லக்னமான கும்பத்திற்கும் – சனி துலாத்தில் இருக்க வேண்டும். வியாழன் மேஷத்திலோ அல்லது ரிஷபத்திலோ இருப்பது சிறப்பான அமைப்பாகும்.

*மீன லக்னத்திற்கு – லக்னாதிபதி கடகத்தில் இருக்க வேண்டும். அவ்வாறு உள்ள வியாழன் வக்ர கதியில் இருப்பது சாமர யோகத்தை ஏற்படுத்தும்.

சாமர யோகத்தில் சில மாற்றங்கள்…

மகர லக்னத்திற்கும் கும்ப லக்னத்திற்கும் சனி உச்சம் பெற்றிருப்பது சில உபாதைகளையும் சில தோஷங்களையும் ஏற்படுத்தும் அதற்கு தகுந்தாற் போல் சில விஷயங்களை செய்து கொள்தல் அவசியம்.

தனுசு லக்னத்திற்கும் மீன லக்னத்திற்கும் வியாழன் உச்சம் பெறும் பொழுது லக்னத்திற்கு கேந்திரமாக அமைய வாய்ப்பில்லை ஆகவே, இந்த லக்னத்திற்கு சாமர யோகம் சுமாராக வேலை செய்யும்.

The post அரசனை போல வாழ்வு தரும் சாமர யோகம்! appeared first on Dinakaran.

Read Entire Article