அரங்கமா நகருளானே

19 hours ago 1

பகுதி – 2

மெச்சிய அந்த நொடியே ஸ்ரீரங்க விமானம் பாற்கடலில் இருந்து மேலே எழும்பி வந்தது. விமானத்தினுள் ஆதிசேஷன் முத்துக் குடை பிடிக்க, பள்ளிகொண்ட பெருமானாக ரங்கநாதன் சயனித்திருந்தார். வைகுண்டத்திலே இருக்கும் சுனந்தன், நந்தன் மற்றும் தேவர்கள் அங்கே குழுமியிருந்தார்கள். கருடன் தனது தோளிலே சுமந்த அந்த விமானம், கொஞ்சம் கொஞ்சமாக மேலெழும்பி வந்தது. விஷ்வக்சேனன், ஆதிசேஷனின் பின்புறம் கோலைப் பிடித்தபடி மெய்க்காப்பாளனாக நின்று கொண்டிருந்தான். நர்த்தகிகள் நாட்டியமாடினார்கள். துந்துபிகள் முழங்கின. விற்பன்னர்கள் வேதங்கள் ஓதினார்கள். வாசனைப் பூக்கள் தூவப்பட்டன. நறுமணப் புகை எங்கும் நிறைந்திருந்தது. வைகுண்ட லோகம் மீண்டும் உருவாக்கப்பட்டது போல, பிரம்மன் மெய்சிலிர்த்தார்.

வார்த்தைகள் வராமல் ஆனந்தக் கண்ணீர் மல்க, இமைக்காமல் தரிசித்தபடி நின்றிருந்தார். பயபக்தியுடன் பிரம்மன் விமானத்தை நான்கு முறை வலம் வந்து நமஸ்கரித்தார். பின் விமானத்துள் நுழைந்தார். இந்திர நீலக்கல்லின் நிறத்திலான அங்கம், கருணையைப் பொழியும் கண்கள், மெல்லிய புன்னகை பூத்த வதனம், தலையில் தங்கக் கிரீடம், காதில் குண்டலங்கள், தோள்களிலே தோள் வளையல்கள், திருக்கரங்களில் ஆபரணங்கள், மார்பினில் முத்துக்கள் மற்றும் வைரங்களாலான மணியாரங்கள், வலது மார்பில் அலங்காரமான மகாலட்சுமி, வார்த்தெடுத்த தங்கநிறத்திலான பட்டுப் பீதாம்பர ஆடை, இடுப்பினிலே மேகலை, கால்களிலே சிலம்பு, வலது கரத்தை தலைமாட்டிலும், இடது கரத்தின் பாதத்தை நோக்கி நீட்டிக் கொண்டும் சயனத்தில் இருந்த ரங்கநாதனின் திருகோலத்தைக் கண்டு மனம் உருகி பிரம்மன் நின்றார்.

தரிசித்த அந்தக் கணமே பிரம்மன், “பல்லாண்டு பல்லாண்டு’’ எனப் போற்றிப் பாடத்துவங்கினார். அயோத்தியில் இங்கே பள்ளிகொண்டிருக்கும் ரங்கநாதரை, முதன் முதலில் பல்லாண்டு பாடித் தொழுதவர் பிரம்மனே. பிரம்மனை நோக்கி ரங்கநாதன் திருவாய் மலர்ந்தருளினார். “பிரம்மனே! நீ தவத்தின் உச்சம் தொட்டாய். நீ வேண்டும் வரம் நான் அளிப்பேன் கேள்’’ என்றார். பிரம்மனுக்கு வார்த்தைகள் வரவில்லை.

“என்ன வரம் கேட்பேன். நானே! என் மனம் அறிந்து அருளும் ரங்கனான உன்னிடம்! என்றும் உன்னை தரிசித்துக்கொண்டே இருக்க வேண்டும். உனக்கு நான் திருவாராதனம் செய்யும் பாக்கியம் அருளினால் போதும்!’’ என்றார். அதற்கு ரங்கநாதர் புன்னகைத்தார். “உங்களை சத்தியலோகத்திற்கு அழைத்துச் செல்லலாமா?’’“அதற்காகத்தான் நான் சுயம்புவாக எழுந்தருளியிருக்கிறேன். தெய்வங்கள் இனி வரும் காலங்களில், தேவர்களால், முனிவர்களால், சித்தர்களால், மனிதர்களால் பிரதிஷ்டை செய்யப்படும். எல்லோரும் இறையருள் அடைவார்கள்’’ நெக்குருகிப் போன பிரம்மனுக்கு “ஓம் நமோ பகவதே வாசுதேவாய’’ எனும் பன்னிரண்டு எழுத்து மந்திரத்தை ரங்கநாதர் உபதேசித்தார். அந்த மந்திரத்தை பிரம்மன், சுவாசிப்பது போல ஜபித்தான். ரங்கநாதரை ஸ்ரீரங்க விமானத்துடன் சத்தியலோகத்தில் பிரம்மன் எழுந்தருளச்செய்தான்.

சத்திய லோகத்தில், விரஜா தீர்த்தக் கரையினில், விஸ்வகர்மா எனும் தேவ தச்சனை கொண்டு ஒரு பிரம்மாண்டமான கோயில் நிர்மாணிக்கப்பட்டது. ஐப்பசி மாதம், கிருஷ்ணபட்சம், துவாதசி திதி, ரோகிணி நட்சத்திரம் கூடிய சுபயோக சுப தினத்தில், அந்தக் கோயிலில் ரங்கநாதரை பிரம்மன், எழுந்தருளச் செய்தார். சத்திய லோகத்தில் ரங்கநாதருக்கு பிரம்மன், பிரம்மோற்சவம் விமர்சையாக நடத்தினார்.

சூரியனை உற்சவத்தில் கலந்து கொள்ளுமாறு பிரம்மன் அழைத்திருந்தார். சூரியனும் மிகுந்த பக்தியுடன் ரங்கநாதரை வணங்கி பாக்கியம் பெற்றார். ரங்கநாதர் சூரியனை அருகில் அழைத்தார். தன்னை திருவாராதனம் செய்யும் பாஞ்சராத்திர ஆகம முறையை உபதேசித்தார். சூரியன், தனது வம்சத்தில் உதித்த வைவஸ்வத மனுவிற்கு அதனை உபதேசித்தார். அவருக்குப் பின் சூரியவம்சத்தில் இஷ்வாகு தோன்றினார்.

அவர் நாராயணனுக்கு ஐந்து காலங்களிலும், ஐந்து வகையான கைங்கரியங்கள் என்ற நியமத்தில் பக்தி செய்தார். வேதங்களையும், வேதங்கள் உணர்த்தும் அறத்தையும், தர்மத்தையும், நீதியையும் கற்றறிந்து அதன் வழி ஆட்சிபுரிந்து வந்தார்’’ என்று வசிஷ்டர் கூறிக் கொண்டிருக்கையில் ராமன் எழுந்திருந்து வசிஷ்டரை வணங்கி இடைமறித்து, “குருவே! குறிக்கிடுவதற்கு மன்னிக்க வேண்டும். என்னுடைய மூதாதையாரான இஷ்வாகு, தன் முன்னோர்களான சூரியன், மனு போன்றவர்களைப் போல தன்னால் சத்தியலோகம் சென்று பிரம்மன் நிர்மாணித்த ரங்கநாதரை வணங்க முடியவில்லையே என்ற பேராதங்கம் கொண்டார். தான் சத்தியலோகம் செல்வதற்குண்டான மார்க்கத்தை அளிக்கக்கூடியவர் ஒரே ஒருவர்தான். அவர், நம் குல குரு வசிஷ்டர்தான். பிரம்மனின் மகனான நம் குலகுருவை விட வேறு யார் இதற்கு ஒரு தீர்வை வழங்க முடியும்? இஷ்வாகு வசிஷ்டரிடம் சென்றார். அவரைப் பணிந்து வணங்கினார்.

“இஷ்வாகுவே! ரங்கநாதரை தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் உன் மனதில் உதிப்பதற்கு காரணமானவர் ரங்கநாதாரே. அவரை வணங்க நீ ஏன் சத்தியலோகம் செல்ல வேண்டும்? என் தந்தை பிரம்மனைப் போல், நீயும் தவம் செய். ரங்கநாதர் நிச்சயம் சத்தியலோகத்திலிருந்து பூலோகம் வந்துவிடுவார்.’’ என ஆசி வழங்கி, மூல மந்திரத்தை அருளினார். இஷ்வாகுவிற்கும் நமது குருவிற்கும் நடந்த உரையாடலை என் தந்தை தசரதன் இங்கே குடிகொண்டிருக்கும் ரங்கநாதர் சந்நதியில் பகிர்ந்துகொண்டுள்ளார். இஷ்வாகு தவத்தை துவங்கினார் கோடை காலத்தில் நான்கு திசைகளிலும் தீயை மூட்டி மூலமந்திரத்தை ஓதியவாறே தவம்புரிந்தார் குளிர்காலத்தில் நீருக்குள் நின்றபடி தவத்தை தொடர்ந்தார்.

எத்தனையோ இடையூறுகள் வந்த போதிலும் இஷ்வாகுவின் தவம் தொடர்ந்தது. தவத்தை மெச்சிய ரங்கநாதர் பிரம்மன் மனதில் தோன்றினார். தான் சத்திய லோகத்தில் இருந்து அயோத்திக்குச் செல்ல இருப்பதாகவும் அதற்குண்டான ஏற்பாடுகளை செய்யுமாறும் பணித்தார். பங்குனி மாதம், ரோகிணி நட்சத்திரம் கூடிய சுப தினத்தில், கருடன் தன் தோளின் மீது ஸ்ரீரங்க விமானத்தையும் ரங்கநாதரையும் சுமந்து, பிரம்மனுடன் அயோத்தி வந்தடைந்தார். இஷ்வாகு அமைத்த இந்த கோயிலில் அன்றிலிருந்து இன்றுவரை ரங்கநாதருக்கு ஆராதனை தொடர்ந்து நடந்துவருகிறது. இஷ்வாகுவின் உயரிய தவமும், நம் குலகுரு வசிஷ்டரின் ஆசியும்தான், நாம் இந்த ரங்கநாதரை வணங்குவதற்குக் காரணம்.

அனைவரும் வசிஷ்டரை வணங்கினார்கள். ராமன் விபீஷணனை அருகில் அழைத்தான். ரங்கநாதனுக்கு திருவாராதனை செய்வதற்கான பொருட்கள் எல்லாவற்றையும் அளித்தான். இவற்றையெல்லாம் தனக்கு ஏன் ராமன் அளிக்க வேண்டும் என்று விபீஷணன் திகைத்தான். ராமன்; “விபீஷணா! உன்னுடைய தன்னலமற்ற சேவைக்கு நான் ஒரு பரிசளிக்கப் போகிறேன். குலகுருவின் அனுமதியுடன் ரங்கநாதரையும் ஸ்ரீரங்க விமானத்தையும் உனக்கு வழங்குகிறேன்’’. விபீஷணனுக்கு ஆனந்தக் கண்ணீர் பொங்கி, பார்வையை மறைத்தது. ராமனின் பாதங்களில் விழுந்து வழங்கினான். வசிஷ்டரின் பாதங்களைத் தொட்டு நமஸ்கரித்தான். வசிஷ்டர்; “ரங்கநாதரின் சித்தத்தை ராமன் நிறைவேற்றியிருக்கிறான்.

மிகுந்த சந்தோஷம். பிரம்மனை நோக்கி,“விபீஷணனாகிய நீயும், உன் சகோதரர்கள் ராவணனும் கும்பகர்ணனும் தவம் புரிந்தீர்கள். நீ ஒருவன் மட்டும்தான் அறத்தின் பக்கம் நான் நிற்க வேண்டும் என்று வேண்டினாய்.பிரம்மன் அன்றே முடிவு செய்து இருப்பார். ராமன் இன்று முடிவெடுத்து உனக்கு அளித்துவிட்டான். உண்மையான சரணாகதிக்கு சான்று நீ.’’ என்று வாழ்த்தினார். பங்குனி மாதம், கிருத்திகை நட்சத்திரம், சனிக்கிழமை விடியற்காலை பொழுதில், விபீஷணன் தன் தலையில் ரங்கநாதரை சுமந்தபடி ஸ்ரீரங்க விமானத்துடன், தனது புஷ்பக விமானத்தில் இலங்கையை நோக்கிப் பயணித்தான்.

உச்சிப் பொழுதில் ரங்கநாதர் கீழே நோக்கினார். வடதிரு காவிரி எனும் கொள்ளிட ஆற்றிற்கும், தென்திரு காவிரி ஆற்றிற்கும் இடையேயான சோலைகள் சூழ்ந்த பகுதியை புஷ்பக விமானம் கடந்துகொண்டிருந்தது. உற்று கீழே நோக்கிய ரங்கநாதருக்கு, ஒரு எண்ணம் உதித்தது. விபீஷணனுக்கும் அதே எண்ணத்தை உதிக்கச் செய்தார். திருவாராதனைக்கு நேரம் ஆகிவிட்டது. இலங்கையை அடைவதற்கு இன்னமும் தொலைதூரம் செல்ல வேண்டி இருக்கிறது, இந்தச் சோலையிலேயே திருவாராதனை செய்துவிடலாம் என்று முடிவு செய்தான். சந்திர புஷ்கரணி எனும் குளத்தின் அருகிலுள்ள புன்னைமர அடியில், தன் தலையில் சுமந்திருந்த ரங்கநாதரை, ஸ்ரீரங்க விமானத்துடன் விபீஷணன் கீழே இறக்கி வைத்தான். ரங்கநாதருக்கு இடம் மிகவும் பிடித்துப் போனது.

புன்னைமரம், தனக்கும் ஒரு பங்கு ரங்க நாதர் அளிக்க இருப்பதை உணர்ந்தது. நெகிழ்ந்தது. மலர்களை ரங்கநாதர் மேல் சொரிந்தது. விபீஷணன், சந்திர புஷ்கரணியில் நீராடி, காவிரியில் நீர் எடுத்து ரங்கநாதருக்கு அபிஷேகம் செய்தான். காவிரி நதிக்கு, தான் கங்கைநதியை விட மிகவும் புனிதமானவள் என்கின்ற எண்ணம் உறுதிப் பட்டது. திருச்சேறையில் நாராயணனை நோக்கி, தான் செய்த தவம், அதனால் பெற்ற வரம் நினைவுக்கு வந்தது.

காவிரியின் சந்தோஷம் ரங்கநாதரை குளிரவைத்தது. விபீஷணன் புன்னை, செண்பக, பாதிரி, பாரிஜாத, அசோக மலர்களால் அர்ச்சித்தான். ஆராதனை நடந்து கொண்டிருக்கும் ொழுதில், மங்கள வாத்தியங்கள் முழங்க, முனிவர்கள். அடியார்கள் புடைசூழ, சோழ மன்னன் தர்மவர்மன் அங்கு வந்தடைந்தான். `ரங்கா! ரங்கா! நீ வந்து விட்டாயா?’ என்று கூத்தாடியபடி ரங்கநாதரை வணங்கினான். தர்மவர்மன் சூரிய குலத்தில் உதித்த ஒரு சோழப்பேரரசன். தசரதன் புத்திர காமேஷ்டி யாகம் செய்த தருணத்தில் தர்மவர்மன் அதில் கலந்து கொள்ள அயோத்தி சென்றிருந்தான். அயோத்தியில், ஸ்ரீரங்க விமானத்தில் எழுந்தருளியிருந்த ரங்கநாதரை தரிசித்தான்.

அயோத்தியின் வளத்திற்கும், சிறப்பிற்கும் காரணம் ரங்கநாதரின் அருள் மட்டுமே என்று எண்ணினான். ரங்கநாதரை தரிசித்த நாள் முதல் தர்மவர்மனின் எண்ணம் முழுவதும் ரங்கநாதர் சோழமண்டலம் எழுந்தருள வேண்டும் என்பதாகத்தான் இருந்தது. எந்த நேரமும் ரங்கநாதரிடம் பிரார்த்தனை செய்தபடியிருந்தான். உண்மையான பக்திக்கு ரங்கநாதர் ஆசி வழங்க அன்றே எண்ணிவிட்டார். ராமன், ராவணனை வதம் செய்து, அயோத்தியில் அசுவமேத யாகம் ஒன்றை நிகழ்த்தினான். அதில் தர்மவர்மன் பங்கு கொண்டான். மீண்டும் ரங்கநாதரை தரிசிக்க, அவனது மனம் முழுவதும் ரங்கநாதரே வியாபித்து இருந்தார்.

இன்று சந்திரபுஷ்கரிணி கரையில் ரங்கநாதரை தரிசிக்க, அவனுக்கு வியப்பும் பரவசமும் எல்லையின்றி இருந்தது. ஆராதனை முடிந்து, விபீஷணன் ரங்கநாதரை சுமந்து கொண்டு இலங்கை செல்லத் தயாராக இருப்பதைக் கண்டு பதற்றமுற்றான்.“நாங்கள் இன்னும் சிறிது காலம் ரங்கநாதரை பூஜிக்க விழைகிறோம்’’“தர்மவர்மரே! உங்களின் பக்தி எனக்குப் புரிகிறது ஆனால், நாளை பங்குனி மாதம் ரோகிணி நட்சத்திரம். ரங்கநாதருக்கு பிரம்மோற்சவம் செய்ய வேண்டிய திருநாள். நான் இப்பொழுதே இலங்கைக்குச் சென்றால்தான் அதைக் கொண்டாட முடியும்.’’

“விபீஷணா! ரங்கநாதருக்கு இந்த முறை நாம் எல்லோருமாக இங்கேயே பிரம்மோற்சவம் செய்வோமே! நீங்கள் தயை கூர்ந்து ரங்கநாதருடன் இருந்து விடுங்கள்’’ விபீஷணன் ஒப்புக் கொண்டான். ரங்கநாதர் ஒப்புக் கொள்ள வைத்துவிட்டார். ரங்கநாதரின் திருவள்ளம் அப்படித்தான் இருந்தது. பிரம்மோற்சவம் மிகவும் விமரிசையாக நடந்தேறியது. விபீஷணன் புறப்படத் தயாரானான். தர்மவர்மன் இன்னும் சிறிது காலம், இன்னும் சிறிது காலம் என்று கூறியே நாட்கள் கடந்து கொண்டே போனது. இன்று இலங்கைக்கு ரங்கநாதருடன் புறப்பட்டே தீர வேண்டும் என மனதில் விபீஷணன் தீர்மானித்தான். ரங்கநாதரை வணங்கினான். தொட்டுத் தூக்கித் தலையில் வைத்துக்கொள்ள முயன்றான்.

எவ்வளவு முயமன்றும், ரங்கநாதர் ஒரு அங்குலம்கூட நகரவில்லை. தான் ஏதோ தவறிழைத்து விட்டோம் எனக் கலங்கினான். மிகவும் வேதனை கொண்டான்.யாருக்குமே கிடைக்காத அரிய ரங்கநாதரை, நான் பெற்று இழந்து விடுவேனோ என புலம்பத் துவங்கினான். கண்ணில்லாதவன், பார்வை கிடைத்து, மீண்டும் இழந்ததைப் போலானது தனது நிலை என்று அரற்றினான். ரங்கநாதர் பாதங்களில் தலையை வைத்து பெரிதாக அழத்துவங்கினான். தர்மவர்மனின் தவம், காவிரிக்கு கிடைத்த வரம், எல்லாவற்றிற்கும் மேலாக ரங்கநாதரின் திருவுள்ளம் இவை எதுவுமே விபீஷணனுக்கு விளங்கவில்லை. ரங்கநாதர் மௌனம் கலைத்தார்.

“விபீஷணா! கலங்க வேண்டாம். இங்கேயே எழுந்தருளியிருப்பது எனக்கு மிகவும் விருப்பமானதாய் இருக்கிறது. நீ இலங்கைக்குப் புறப்படு’’“என்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே ஆவோம். என்றென்றும் உனக்கே நாம் ஆட்செய்வோம் என்று நான் எண்ணியிருந்தேன். உன்னைப் பிரிவதா? அதைவிட நான் மடிவதே மேல். நான் உன்னோடே இருந்துவிடுகிறேனே! அதற்காவது நீ அருளக்கூடாதா?’’“உன் பக்தி மெச்சத்தக்கது. ராமனின் திருவுள்ளம் நீ இலங்கை அரசை ஆள வேண்டும் என்பதுதான்.”
“ராமன்தான் உங்களை எனக்கு அளித்தான். அதுவும் ராமனின் திருவுள்ளம்தானே.’’

“உனக்கு என்றும் என் அருள் உண்டு. உன்னைவிட்டு நான் பிரிவதும் இல்லை. உன்னைவிட்டு விலகுவதுமில்லை. நான் உனக்காக, நீ இருக்கும் தெற்கு திசை இலங்கையை நோக்கி, சயனத்திருப்பேன். நீ சிரஞ்சீவியாக இருக்கப் போகிறவன் என்னுடன் மீண்டும் சத்தியலோகத்தில் இணையப் போகிறாய்.’’“ஐயனே! அரங்கனே! நீங்கள் அருளிய படியே நான் நடக்கிறேன். அயோத்தியில் இருந்து இந்த இடம் வரை உங்களை நான் தலையில் சுமந்தேன். இனி இங்கிருந்து இலங்கை செல்லும் வரையிலும், பின், என் வாழ்நாள் முழுமையும் உங்களை நெஞ்சில் சுமப்பேன். உங்களையும் ராமனையும் வணங்குகிறேன்.” கண்கள் கலங்க கூறியபடி, விபீஷணன் பிரியா விடைபெற்றான்.

புஷ்பக விமானத்தில் இலங்கையை நோக்கிப் புறப்பட்டான். பிரம்மனின் தவத்தால் ரங்கநாதர் தோன்றினார். இஷ்வாகுவின் தவத்தால் அயோத்தியில் எழுந்தருளினார். விபீஷணனின் தவத்தால் இன்று ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளினார். என அங்கிருந்த எல்லோரும் விபீஷணரை புகழ்ந்தார்கள். ரங்கநாதர் அரங்கமா நகருளானாக ஆகிவிட்டார். காவிரி ரங்கநாதரின் பாதங்களை வருடிச் செல்ல, புன்னை அவர் திரு முடியில் பூக்களைச் சொரிந்தன.

(தொடரும்)

தொகுப்பு: கோதண்டராமன்

The post அரங்கமா நகருளானே appeared first on Dinakaran.

Read Entire Article