பகுதி 2
ஸ்ரீ வல்லபேதி வரதேதி தயாபரேதி
பக்தப்ரியேதி பவலுன்டன கோவிதேதி
நாதேதி நாகஸயனேதி ஜகந்நிவாஸேதி
ஆலாபனம் ப்ரதிதினம் குருமே முகுந்த
இந்த முகுந்த மாலையில் ஸ்ரீ வல்லபேதி… வரதேதி… தயாபரேதி… என்று எடுத்தவுடனே மூன்று நாமங்களை சொல்கிறார். அவன் பிராட்டிக்கு வசப்பட்டவன், பிராட்டியோடு இணைந்திருப்பவன் அதனால் ஸ்ரீ வல்லபன். அப்படி பிராட்டியோடு இணைந்திருப்பதால் என்ன பலனெனில், பிராட்டியோடு இணைந்திருப்பதால் வரதனாக இருக்கிறான். நாம் கேட்கக் கூடிய வரங்களையெல்லாம் கேட்ட மாத்திரத்தில் தரக்கூடியவனாக வரதனாக இருக்கிறான். அதற்கடுத்து, அவன் கேட்டதையெல்லாம் கொடுத்தால் மட்டும் போதாது. கேட்டதையும் கொடுப்பதைத் தாண்டி நமக்கும் அவனுக்கும் அத்யந்த அன்யோன்ய பாவம் இருக்க வேண்டும். அந்த அன்யோன்ய பாவம் எப்படி வருமெனில், அவன் நம்மீது கொண்டிருக்கக் கூடிய தயை மூலமாக வரும். அந்த தயையை அவனுக்கு உண்டாக்குபவன் யாரெனில், அதுவும் பிராட்டிதான். அவன் ஸ்ரீ வல்லபனாக இருப்பதாலும், பிராட்டி சொல்படி அவன் வரதனாக இருக்கிறான். அந்தப் பிராட்டி நமக்கு நெஞ்சத்தில் தயையை உண்டு பண்ணுவதால் தயாபரனாக இருக்கிறான். இதைத்தான் முதல் வரிகளில், ஸ்ரீ வல்லபேதி வரதேதி தயாபரேதி… என்று போட்டுவிட்டு, அதற்கடுத்து பக்தப்ரியேதி பவலுன்டன கோவிதேதி… என்று அடுத்தடுத்த நாமாக்களையும்
அடுக்குகிறார்.
பக்தர்கள் மீது பிரியனாக இருக்கிறான். அதற்கடுத்து, பவலுண்டன கோவிதனாக இருக்கிறான். பவம் என்கிற சம்சாரத்தை லுண்டனம் பண்ணக் கூடியவனாக, அதாவது திருடிக் கொள்பவனாக, அதில் மிகவும் சிறந்தவனாக அதாவது கோவிதனாக இருக்கிறான். இதற்கும் அடுத்து, நாதேதி நாகஸயனேதி ஜகந்நிவாஸேதி… நாதனாக அதாவது நமக்கெல்லாம் தலைவனாக இருக்கிறான். நாக சயனனாக இருக்கிறான். நாகத்தில் சயனம் பண்ணக் கூடியவனாக இருக்கிறான். அதற்கடுத்து ஜகன் நிவாஸனாக இருக்கிறான். ஜகன் நிவாஸ… என்கிற பதத்திற்கு இரண்டு பொருள்கள் உண்டு. ஒன்று… ஜகத்தை தனக்குள் நிவாஸம் பண்ணியிருக்கக் கூடியவன். இந்த மொத்த உலகமும் அவனுடைய வயிற்றுக்குள் அடக்கம். அதனால் ஜகன் நிவாஸன். இன்னொன்று, இந்த உலகத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொரு பொருளிலும் அவன் நிறைந்து இருப்பதால் அவன் ஜகன் நிவாஸன். இப்படியாக எட்டுவிதமாக நாமாக்களை ஆழ்வார் காண்பித்துக் கொடுத்து, இந்த நாமாக்களை எல்லாம் சொல்லி ஆராதிக்கக் கூடியவனாக என்னை வைப்பாய் என்று முகுந்தனாகிய பெருமாளிடம் ஆழ்வார் விண்ணப்பிக்கிறார்.
இந்த ஸ்லோகத்தில் இருக்கக் கூடிய வெளிப்படையான அர்த்தங்கள் சிலவற்றை பார்த்து விட்டோம். ஆழ்வார்கள் இந்த நாமாக்களை ஒரு அலைவரிசையில் அடுக்கியிருக்கிறார். இந்த அடுக்கும் முறையில் ஒரு சில விஷயங்கள் நமக்கொரு உள்ளார்த்தம் மிக்கதாக, உள் வெளிச்சமாக (insight) தரிசிக்கிறோம். ஆழ்வார்கள், ஸ்ரீ வல்லபேதி வரதேதி தயாபரேதி என்று தொடங்குகிறார் அல்லவா…. இதற்கான அர்த்தத்தை நாம் பார்த்தாலும் கூட, இன்னும் ஒரு விஷயத்தையும் சேர்த்துப் பார்ப்போம். ஸ்ரீ வைஷ்ணவத்தில் மூன்று ஷேத்ரங்கள் முக்கியமாக சொல்லப்படுகின்றது. நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் முதல் திவ்ய தேசமாக இருக்கக்கூடியது ஸ்ரீ ரங்கம். இதையே கோயில்… பெருமாள் கோயில்… திருமலை… இதில் கோயில் என்று சொல்லக் கூடியது ஸ்ரீ ரங்கம். பெருமாள் கோயில் என்று சொல்லக் கூடியது காஞ்சிபுரம்.இதில் முதலில் சொல்லப்பட்ட ஸ்ரீ என்று தாயாருடைய பெயரில் சொல்லப்பட்ட ஷேத்ரம் எதுவெனில், ஸ்ரீ ரங்கம்தான். ஸ்ரீ ரங்கம் என்று சொன்னாலே அங்கு ரங்கனைச் சொல்வதற்கு முன்னாலேயே ஸ்ரீ யைச் சொல்லி விடுகின்றோம். இந்த க்ஷேத்ரத்திலேயே ரங்கநாயகிக்கு வசப்பட்டவனாகத்தான் அங்கு பெருமாள் சேவை சாதிக்கிறார். எல்லா ஷேத்ரத்திலும் அப்படி இருந்தால் கூட, இந்த ஷேத்ரமே ஸ்ரீ என்றுதான் தொடங்குகிறது.
அதற்கடுத்து வரதேதி… என்று சொல்லும்போது வரதன் என்கிற நாமோவோடு எங்கு இருக்கிறான் எனில், காஞ்சிபுரத்தில் சேவை சாதிக்கிறான். இங்குதான் பெருமாள் வரதராஜப் பெருமாள் என்கிற திவ்ய நாமத்தோடு சேவை சாதிக்கிறார். தயாபரன் என்று சொல்லும்போது திருமலை மீது பெருமாள் வெங்கடேஸ்வரனாக நிற்கிறான். அப்படி நிற்கும்போது ஒன்றை நாமத்தில் கவனிக்க வேண்டும். வேதாந்த தேசிகர் எந்த ஷேத்ரத்தில் தயா சதகம் பாடியிருக்கிறார் என்று பார்த்தால், திருமலையில் இருக்கக்கூடிய மலையப்பனிடம்தான் தயாசதகம் பாடியிருக்கிறார். அந்தப் பெருமாளை பார்த்துத்தான் அந்தப் பெருமாளினுடைய தயையை உணர்ந்து, அந்த தயையே பிராட்டியாக வைத்து, தயையே வைத்து தயா சதகம் பாடினார். தயாபரேதி என்று சொல்லும்போது நமக்கு இந்த நாமம் திருமலை என்கிற ஷேத்ரத்தை காண்பித்துக் கொடுக்கிறது. இப்படியாக முதல் மூன்று நாமாக்களில் மூன்று முக்கிய திவ்ய தேசங்களை ஆழ்வார் நினைவுபடுத்துகிறார். இப்போது இதற்கு அடுத்து, பக்தப்ரியேதி பவலுன்டன கோவிதேதிநாதேதி நாகஸயனேதி ஜகந்நிவாஸேதி- என்று ஐந்து விதமான நாமங்களை போடுகிறார்.
இப்போது திவ்ய தேசங்களில் நாம் பெருமாளை எப்படி சேவிக்கிறோமெனில், அர்ச்சாவதாரமாக சேவிக்கின்றோம். பகவானின் நிலைகளிலேயே நாம் மிக எளிமையாக பகவானை பிடித்துக் கொள்ளும் நிலை எதுவெனில், அர்ச்சாவதார நிலைதான். ஏனெனில், கோயிலுக்குச் சென்று அர்ச்சாவதார மூர்த்தியை பார்ப்பது என்பது யாருக்கும் பெரிய கஷ்டம் கிடையாது. இங்கு அர்ச்சாவதாரமென்பது எளிதாக பிடித்துக் கொள்ளக்கூடிய நிலை. அர்ச்சாவதாரத்தை சேவித்தபடியே அதன்மூலமாக நாம் அவனுடைய அந்தர்யாமித்துவத்தை தெரிந்து கொள்ளலாம். அந்தர்யாமித்துவத்தை தெரிந்து கொண்டு அவனுடைய விபவாதாரங்களை தெரிந்து கொள்ளலாம். அவனுடைய விபவாதாரங்களை தெரிந்து கொண்டு, அதிலிருந்து வியூகத்தை தெரிந்து கொள்ளலாம். வியூகத்தை தெரிந்து கொண்டு அதிலிருது பரத்தை தெரிந்து கொள்ளலாம். இப்போது நாம் முதலில் பிடிக்க வெண்டியது அர்ச்சை. பரம், வியூகம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சை. இப்போது இந்த ஐந்து நிலைகளில் இவை எல்லாமுமே பகவானுடைய வரிசைக் கிரமம். ஆனால், நாம் இதை கீழிருந்துதான் மேலே செல்ல வேண்டும். அர்ச்சாவதாரத்தைதான் பார்க்க வேண்டும். அதன் மூலமாக அந்தர்யாமியை உணர வேண்டும். அந்தர்யாமித்துவம் மூலமாகத்தான் விபவாவதாரங்களை உணர முடியும். விபவாவதாரம் மூலமாக வியூகத்தையும், வியூகத்தின் மூலமாக பரத்தையும் உணர முடியும். நமக்காக ஆழ்வார் இங்கு… பக்தப்ரியேதி பவலுன்டன கோவிதேதிநாதேதி நாகஸயனேதி ஜகந்நிவாஸேதி… என்று ஐந்து நாமங்களின் மூலமாக நமக்கு ஏதோ ஒரு சூட்சுமத்தை உணர்த்துகிறார். அதேசமயம் காண்பித்தும் கொடுக்கிறார்.
– தொடரும்
The post அரங்கனை கண்டேனே! appeared first on Dinakaran.