
சென்னை,
தாழக் கிடப்போரைத் தற்காப்பதே தர்மம் என்னும் கொள்கையைப் பரவலாக்கம் செய்தவர் அய்யா வைகுண்டர். அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நிலவிய சாதி பாகுபாடுகளுக்கு எதிராக போராடியவர். சுவாமிதோப்பில் சமத்துவ கிணறும் வெட்டினார்.
கன்னியாகுமரி மாவட்டம், சுவாமிதோப்பு பகுதியில் அய்யா வைகுண்டரின் தலைமை பதி உள்ளது. உன்னில் இறைவனைப் பார் என்னும் உயர்ந்த நோக்கத்தோடு இங்கு கண்ணாடியே தரிசனத்திற்கும் வைக்கப்பட்டு உள்ளது. அய்யா வைகுண்டரை பின்பற்றுபவர்கள் நெற்றியில் நீண்ட நாமமும், தலையில் தலைப்பாகையும் கட்டுவது வழக்கம்.
ஒவ்வொரு ஆண்டும், மாசி 20-ம் தேதி சுவாமிதோப்பு அய்யா வைகுண்டரின் அவதார தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, அய்யா வழி மக்கள் தெய்வமாக போற்றி வழிபடும் அய்யா வைகுண்டரின் 193-வது அவதார தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனை யொட்டி திருவனந்தபுரத்தில் இருந்தும் திருச்செந்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெவ்வேறு பதிகளில் உள்ள அய்யா கோவில்களில் இருந்து வாகன பேரணிகள் சுவாமி தோப்பிற்கு புறப்பட்டுள்ளன.
சந்தன குடங்கள், முத்துக் குடைகள் ஏந்தியபடி பெண்கள், சிறுவர்கள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் இதில் கலந்து கொண்டுள்ளனர். மேளதாளங்கள் முழங்க சென்ற இந்த பேரணியில் சிறுமிகளின் கோலாட்டம் நடக்கிறது. அய்யா ஹர ஹர ஐயா சிவ சிவ என பக்தர்கள் கோஷமிட்டபடி செல்கின்றனர்.
அய்யா வைகுண்ட சாமியின் அவதார தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் அவதார பதியில் அதிகாலை தாலாட்டு, பள்ளி உணர்தல், அபயம் பாடுதல், சூரிய உதயத்தில் கடல் பதமிட்டு அய்யா வைகுண்டரை அழைத்து வருதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அய்யா வைகுண்டசாமி அவதாரதினத்தையொட்டி சாமிதோப்புக்கு பக்தர்கள் வருவதற்கு வசதியாக நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.