‘அம்ரீத் பாரத்’ திட்டத்தின் கீழ் ரூ.94 கோடியில் தஞ்சை ரயில் நிலையம் நவீன மயம்: பெரிய கோயில் கோபுர வடிவில் முகப்பு தோற்றம்

2 months ago 9


தஞ்சாவூர்: தஞ்சை ரயில் நிலையத்தில் ‘அம்ரீத் பாரத்’ ரயில் நிலைய திட்டத்தில் மேற்கொண்டுள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தின் மிகவும் பழமைவாய்ந்த ரயில் நிலையங்களில் ஒன்று தஞ்சை ரெயில்வே ஜங்ஷன். மிக முக்கியத்துவம் வாய்ந்த இது தென்னக ரயில்வேயின் திருச்சி கோட்டத்திற்கு உட்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சி காலமான 1861-ம் ஆண்டு கட்டப்பட்டது. ஆங்கிலேயர்களின் வணிகம் மற்றும் ராணுவ தளவாடங்களுக்காக தஞ்சை, திருச்சி, நாகை மார்க்கத்தில் ரயில்கள் இயக்கப்பட்டன. சென்னை,தென்மாவட்ட முக்கிய வழித்தடமாக முன்பு தஞ்சை இருந்தது. திருச்சி-விருத்தாசலம்-அரியலூர்-விழுப்புரம் மார்க்கமாக சென்னைக்கு ரயில்பாதை அமைக்கப்பட்ட பின்னர், தஞ்சை வழியாக தென்மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட பெரும்பாலான ரயில்கள் குறைக்கப்பட்டன.

இருப்பினும் மிக முக்கிய சுற்றுலாத்தலங்கள் தஞ்சாவூர், கும்பகோணம், நாகை, திருவாரூர், வேளாங்கண்ணி ஆகியவை தஞ்சையை சுற்றி அமைந்துள்ளதால் இப்பகுதிக்கு ரயில்களில் பயணம் மேற்கொள்வதை சுற்றுலாப்பயணிகள் விரும்புகின்றனர். தற்போது, தஞ்சை மார்க்கமாக சென்னை, ராமேஸ்வரம், திருப்பதி, வாரணாசி, பெங்களூரு, புதுச்சேரி, திருச்செந்தூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோவை, செங்கோட்டை உள்ளிட்ட இடங்களுக்கு எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும் தஞ்சையில் இருந்தும், தஞ்சை மார்க்கமாகவும் மயிலாடுதுறை, திருச்சி, நாகை, நாகூர், காரைக்கால், வேளாங்கண்ணி போன்ற இடங்களுக்கு எக்ஸ்பிரஸ் ரயில்களும் இயக்கப்படுகின்றன. திருச்சி கோட்டத்தில் திருச்சி ரெயில்வே ஜங்ஷனுக்கு அடுத்து அதிகளவில் வருவாய் ஈட்டித்தருவது தஞ்சை ரெயில்வே ஜங்ஷன்.

இந்நிலையில், ‘அம்ரீத் பாரத்’ ரயில் நிலைய திட்டத்தின் கீழ் தென்னக ரெயில்வேயில் 90 ரெயில் நிலையங்களை மேம்படுத்தத் திட்டமிடப்பட்டது. இதற்காக ரூ.934 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் தஞ்சை ரெயில்வே ஜங்ஷனை மேம்படுத்துவதற்கு மட்டும் ரூ.94 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாட்டு பணிகள் பல்வேறு கட்டங்களாக நடந்து வருகிறது. முகப்பு பகுதியில் தஞ்சை பெரிய கோயில் கோபுரம் போன்ற அமைப்பு கட்டப்பட்டு பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. நடைமேடைகளில் கூடுதல் மேற்கூரைகள் அமைக்கப்பட்டு வருகிறது. நவீன உட்கட்டமைப்பு குளிர் சாதன வசதிகளுடன் பயணிகள் காத்திருப்போர் அறை சீரமைக்கப்பட்டு உள்ளது. எக்ஸ்லேட்டர் வசதி செய்யப்பட்டுள்ளது. முக்கியமாக தஞ்சை ரெயில்வே ஜங்ஷனுக்கு வரும் வாகனங்களின் நெரிசலை போக்கும் வகையில், வெளிப்புறம் சாலை புதிதாக போடப்பட்டு உள்ளது.

இவ்வாறு பல்வேறு பணிகளால் தஞ்சாவூர் ரெயில்வே ஜங்ஷன் புதுப்பொலிவு பெற்று வருகிறது. இருப்பினும் இந்த பணிகள் துவங்கப்பட்ட காலத்தில் இருந்த வேகம் படிப்படியாக குறைந்து தற்போது ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வருவதால் பயணிகளுக்கு சிரமத்தை தருகிறது. மேலும் புது பொலிவுடன், அழகான ரெயில்வே ஜங்ஷனை காண தஞ்சை மக்கள் ஆவலாக உள்ளனர். இதன் காரணமாக பணிகளை விரைந்து முடிக்க தஞ்சை பொதுமக்கள், ரெயில் பயணிகளிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

The post ‘அம்ரீத் பாரத்’ திட்டத்தின் கீழ் ரூ.94 கோடியில் தஞ்சை ரயில் நிலையம் நவீன மயம்: பெரிய கோயில் கோபுர வடிவில் முகப்பு தோற்றம் appeared first on Dinakaran.

Read Entire Article