அம்மா மருந்தகங்களுக்கு மூடுவிழா நடத்தத் துடிக்கும் தி.மு.க. அரசு - டி.டி.வி. தினகரன் கண்டனம்

3 months ago 13

சென்னை,

மக்கள் நலனுக்காக தொடங்கப்பட்ட அம்மா மருந்தகங்களுக்கு முழுவதும் மூடுவிழா நடத்தத் துடிக்கும் தி.மு.க. அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கடந்த ஆண்டு சுதந்திர தின உரையில் இடம் பெற்றிருந்த, பொங்கல் பண்டிகை முதல் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படும் என்ற அறிவிப்பு தற்போது வரை நடைமுறைக்கு வராத நிலையில், உடனடியாக அம்மருந்தகங்களை திறக்க கூட்டுறவு நிறுவனங்களுக்கு அரசு நெருக்கடி கொடுப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

முதல்வர் மருந்தகங்கள் தொடங்குவதற்கு அரசு மூலம் வழங்கப்படும் மானியம் குறைவாக இருப்பதால் அம்மருந்தகங்களை தொடங்க தனியார்கள் முன்வராத நிலையில், முதல்-அமைச்சரின் அறிவிப்பை செயல்படுத்த வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக மட்டும் கூட்டுறவு நிறுவனங்களுக்கு கொடுக்கப்படும் நெருக்கடி கடும் கண்டனத்திற்குரியது.

தரமான மருந்துகளை, குறைவான விலையில் தமிழக மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் 2014ம் ஆண்டு முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப்பட்ட அம்மா மருந்தகங்களுக்கு படிப்படியாக மூடுவிழா நடத்திவிட்டு முதல்வர் மருந்தகங்களை திறக்க முடிவு செய்திருப்பது அப்பட்டமான அரசியல் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துகிறது.

தமிழகத்தில் ஏற்கனவே இயங்கி வரும் கூட்டுறவு மற்றும் அம்மா மருந்தகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மாத ஊதியம், மின்கட்டணம் போன்ற செலவுகளை கூட சமாளிக்க முடியாமல் கடுமையான நிதி நெருக்கடியில் இருக்கும் கூட்டுறவு நிறுவனங்களிடம் முதல்வர் மருந்தகங்களை உடனடியாக திறக்கச் சொல்லி நிர்பந்திப்பது அந்த கூட்டுறவு நிறுவனங்களை முற்றிலுமாக முடக்கும் செயலாகும்.

எனவே, அம்மா மருந்தகங்களுக்கு முழுவதுமாக மூடுவிழா நடத்தும் முடிவோடு கொண்டு வரப்படும் முதல்வர் மருந்தகம் திட்டத்தை உடனடியாக கைவிடுவதோடு, ஏற்கனவே இயங்கி வரும் அம்மா மருந்தகங்களுக்கு போதுமான நிதியை ஒதுக்கி அதன் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு மலிவான விலையில் தரமான மருந்துகளை வழங்க முன்வர வேண்டும் என கூட்டுறவுத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Read Entire Article