அம்பேத்கர் சட்டப்பல்கலை. பட்டமளிப்பு விழா; 4,687 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் ஆளுநர்

1 hour ago 2

சென்னை: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் 14வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, 18 ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் 4669 இளநிலை, முதுநிலை மாணவர்கள் உள்பட 4687 பேருக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார்.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் 14வது பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக பெருங்குடி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவுக்கு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகித்தார். உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணகுமார் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ‘‘சிறந்த வக்கீல் என்பவர் சட்டத்தை நன்கு அறிந்தவர் மட்டும் கிடையாது. நீதிக்காக துணிச்சலுடன் நிற்பவரும் சிறந்த வக்கீல்தான். சட்டம் பயிலும் மாணவர்கள் பட்டம் பெற்ற பிறகு தங்கள் கற்றலை எப்போதும் நிறுத்த கூடாது. சட்டம் சார்ந்த பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

சட்டத்தின் செயல்திறனும், ஒழுக்கமும் அதை செயல்படுத்துவோரின் நேர்மை, நோக்கத்தை சார்ந்தது. நியாயமானவர்கள் சட்டத்தை புரிந்து கொண்டு பயன்படுத்தும்போது அது, கருணை, நியாயம், நீதிக்கான கருவியாக இருக்கும்’’ என்றார். பட்டமளிப்பு விழாவில், ஆளுநர்ஆர்.என்.ரவி மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார். ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்ட 18 மாணவர்களுக்கும், 4,669 இளநிலை, முதுநிலை சட்டப்படிப்பு மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் துணைவேந்தர் சந்தோஷ்குமார், பதிவாளர் கவுரி ரமேஷ், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் மஞ்சுளா உள்பட பலர் பங்கேற்றனர்.

The post அம்பேத்கர் சட்டப்பல்கலை. பட்டமளிப்பு விழா; 4,687 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் ஆளுநர் appeared first on Dinakaran.

Read Entire Article