அம்பேத்கர் இறுதிச்சடங்கு: காங்கிரஸ் மீது யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு

1 day ago 4

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் 'பாரத ரத்னா' பாபாசாகேப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் சம்மான் சமரோஹ் என்னும் பயிலரங்கம் நடைபெற்றது. அதில் அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார்.

அதில் பேசிய யோகி ஆதித்யநாத், "அம்பேத்கர் சிலை எங்கெங்கு உள்ளதோ, அவர் பெயரில் பூங்காக்கள் எங்கெங்கு உள்ளதோ அங்கெல்லாம் பா.ஜனதா தொண்டர்கள் 14-ந் தேதி தூய்மைப்பணியில் ஈடுபடுவார்கள்.

1956 டிசம்பர் 6ம் தேதியன்று டெல்லியில் உள்ள அவரது வீட்டில் இறந்த டாக்டர் அம்பேத்கரின் இறுதிச் சடங்குகள் புத்த மரபுகளின்படி செய்யப்பட்டன. அவரது இறுதி ஊர்வலம் மும்பையில் இருந்து டெல்லிக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் கோரினர். ஆனால், இறுதி சடங்குகளை டெல்லியில் நடத்த காங்கிரஸ் கட்சி அனுமதிக்கவில்லை. அவரது நினைவிடத்தை எழுப்பவும் அனுமதிக்கவில்லை. மராட்டிய மாநிலம் மும்பை நகரில் உள்ள சைத்ய பூமியில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

இந்திய அரசியலமைப்பின் தந்தை எனப் போற்றப்படும் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்துவதில் அக்கால காங்கிரஸ் அரசு தோல்வியடைந்தது. ஆனால், பிரதமர் மோடி, அம்பேத்கர் தொடர்புடைய 5 இடங்களை பஞ்சதீர்த்தமாக அறிவித்தார். கடந்த ஆண்டு, காங்கிரஸ் கட்சியினர், போலி அரசியல் சாசன புத்தகங்களை வெளியிட்டபோது, அதை சுட்டிக்காட்டி அம்பலப்படுத்தினோம்.

வக்பு சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதில் இருந்தே எதிர்க்கட்சிகள் வன்முறையை தூண்டி விடுகின்றன. மேற்கு வங்காள மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் 3 இந்துக்கள் வீட்டுக்கு வெளியே இழுத்து வரப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் பட்டியல் இனத்தவர்.

வக்பு என்ற பெயரில் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை ஒரு சிலர் ஆக்கிரமித்துள்ளனர். அவர்களிடம் எந்த வருவாய்த்துறை ஆவணங்களும் இல்லை. அந்த நிலங்கள், வருவாய்த்துறை ஆவணங்களில் வந்தால், ஏழைகள் பலன் அடைவார்கள். அந்த நிலங்களில் அரசாங்கம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி அவர்களுக்கு வழங்கும். அப்படி செய்தால், தங்களது ஓட்டு வங்கி அரசியல் நிரந்தரமாக பாதிக்கப்படும் என்று எதிர்க்கட்சிகள் அஞ்சுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article