அமைந்தகரணை – ஆற்காடு சாலையில் சேதமடைந்து காணப்படும் மின்கம்பம், வயர்கள்: மின்வாரியத்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை

3 months ago 16

செய்யூர்: சித்தாமூர் அடுத்த அமைந்தகரணை-ஆற்காடு செல்லும் சாலையோரத்தில் உள்ள மின்கம்பங்கள் பழுதடைந்து விபத்து ஏற்படும் அபாய நிலையில் காணப்படுகிறது. இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் அடுத்துள்ள அமைந்தகரணை கிராமத்தில், ஆற்காடு செல்லும் வழியில் பெரும்பாலும் விவசாய நிலங்களே உள்ளன. இந்த விவசாய நிலங்களுக்கென சாலையோரங்களில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டன. தற்போது இந்த மின்கம்பங்கள் அனைத்தும் பலத்த சேதமடைந்து காணப்படுகிறது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் அப்பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

இதனால், விவசாய நிலங்களுக்குச் செல்லக்கூடிய மின்கம்பங்கள் முறிந்து விழுந்து விபத்து ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. மேலும், இந்த மின் கம்பங்களுக்கு இடையே செல்லும் மின் வயர்கள் கைதொடும் அளவுக்கு மிகவும் தாழ்வான நிலையில் செல்வதால் பெரும் உயிர்ச் சேதங்கள் நேரிடும் அபாயமும் உள்ளது. இதனால், விவசாயிகள் அறுவடை காலங்களில் வயல்வெளிக்குச் சென்று டிராக்டர் அல்லது அறுவடை இயந்திரங்களை இயக்கும்போது ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்துவிடுமோ என அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து, மின்வாரியத்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே, பெரும் விபரீதங்கள் நேரிடுவதற்கு முன்பே மின்வாரியத்துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து சேதமடைந்து காணப்படும் மின்கம்பங்களை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியத்திலடங்கிய தண்டலம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள மின் வயர்கள் 25 ஆண்டு காலத்திற்கு முன்பு அமைக்கப்பட்டவை. மேலும், பெரும்பாலான மின் வயர்கள் விவசாய நிலங்களின் வழியாக செல்கின்றன. இதன் காரணமாக சிறு மழை, காற்றுக்கே அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. எனவே தண்டலம் ஊராட்சிமன்ற தலைவர் ஆனந்தன் தலைமையில் வார்டு உறுப்பினர் பரந்தாமன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் தட்சிணாமூர்த்தி, சமூக ஆர்வலர் யுவராஜ் உள்ளிட்ட பொதுமக்கள் ஆலத்தூர் மின்வாரிய அலுவலகத்தில் மின் கம்பங்கள், வயர்களை புதிதாக மாற்றக்கோரி மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட இளநிலை செயற்பொறியாளர் பாபு, பொதுமக்களின் கோரிக்கை குறித்து 10 நாட்களுக்குள் தீர்வு ஏற்படுத்தி தருவதாக உறுதியளித்தார்.

The post அமைந்தகரணை – ஆற்காடு சாலையில் சேதமடைந்து காணப்படும் மின்கம்பம், வயர்கள்: மின்வாரியத்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article