அமைதி பேச்சுவார்த்தை தடைபட்டால்... ரஷியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

4 hours ago 4

வாஷிங்டன் டி.சி.,

ரஷியா மற்றும் உக்ரைன் இடையே 2022-ம் ஆண்டு ஏற்பட்ட போரானது 3 ஆண்டுகளை கடந்தும் நீடிக்கிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஆயுத மற்றும் நிதி உதவியை வழங்கி வருகின்றன. ரஷியாவுக்கு, வடகொரியா ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்களை அனுப்பி மறைமுக உதவி செய்து வருகிறது.

போரால் பெண்கள், குழந்தைகள் மற்றும் வீரர்கள் என இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கில் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வரும் மத்தியஸ்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா ஈடுபட்டு உள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன்படி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். இதில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டு உள்ளன என வெள்ளை மாளிகையில் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.

இதேபோன்று, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் பலருடனும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தொடர்ந்து பேசி வருகிறார்.

இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி மார்கோ ரூபியோ வெளியுறவு உறவுகளுக்கான செனட் கமிட்டி முன்பு பேசினார். அப்போது அவர், போர் நிறுத்த ஒப்பந்த விவகாரத்தில் காலதாமதம் எதுவும் ஏற்பட்டால், அதுவே ரஷியாவின் உண்மையான நோக்கம் என எடுத்து கொள்ளப்படும். போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வரையறைக்காலம் அவர்களாலேயே முடிவு செய்யப்படுகிறது.

அவை என்னவென்று பார்த்த பின்னரே விரிவான பேச்சுவார்த்தைகள் சாத்தியப்படும். அதற்காக நாங்கள் காத்திருக்கிறோம். அவர்களின் வரையறைக்காலம் எப்படி இருக்கிறது என்பதில் இருந்து புதினின் கணக்கு என்னவென்று நான் நன்றாக புரிந்து கொள்வேன் என்றார்.

ரஷியர்களுக்கு அமைதி ஒப்பந்தத்தில் விருப்பம் இல்லை என்றும், தொடர்ந்து போரில் ஈடுபட அவர்கள் விரும்புகிறார்கள் என்றால், ரஷியாவுக்கு எதிராக புதிதாக தடைகளை விதிக்க சாத்தியம் உள்ளது என்று அவர் கூறினார். எனினும், இந்த தருணத்தில் தடைகளை விதித்து அச்சுறுத்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விரும்பவில்லை என ரூபியோ வலியுறுத்தி கூறினார். அது தூதரக அணுகுமுறையை தடம் புரள செய்யக்கூடும் என்றும் அவர் கூறினார்.

Read Entire Article