அமைச்சர் வேலையை ஒழுங்காக பாருங்கள்; சுரேஷ் கோபி திரைப்படங்களில் நடிக்க ஒன்றிய அரசு தடை: பல வருடங்களாக படத்துக்காக வைத்திருந்த தாடியை எடுத்தார்

1 week ago 2


திருவனந்தபுரம்: அமைச்சர் வேலையை ஒழுங்காக பாருங்கள் என்று சுரேஷ் கோபிக்கு அறிவுறுத்திய ஒன்றிய அரசு அவர் திரைப்படங்களில் நடிக்க தடை விதித்தது. பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி கடந்த மக்களவைத் தேர்தலில் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து இவர் பெட்ரோலியம், எரிவாயு மற்றும் சுற்றுலாத்துறை இணையமைச்சராக நியமிக்கப்பட்டார். சில மலையாளப் படங்களில் ஏற்கனவே நடிக்க ஒப்பந்தமாகி இருந்ததால் தற்போது தனக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் சுரேஷ் கோபி கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு அமித்ஷா மறுத்து விட்டார்.

தனக்கு ஒன்றிய அமைச்சர் பதவியை விட நடிப்புதான் முக்கியம், விரைவில் படங்களில் நடிக்க அனுமதி கிடைக்கும் என நம்புவதாக சுரேஷ் கோபி கடந்த சில மாதங்களுக்கு முன் கூறியிருந்தார். ஆனால் சுரேஷ் கோபி திரைப்படங்களில் நடிக்க ஒன்றிய அரசு திட்டவட்டமாக மறுத்து விட்டது. பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தான் அவருக்கு படங்களில் நடிக்க தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் அமைச்சர் வேலையை ஒழுங்காக பார்க்குமாறும், தொகுதி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுமாறும் அமித்ஷா சுரேஷ் கோபியிடம் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து சுரேஷ் கோபி ஒற்றக்கொம்பன் படத்திற்காக கடந்த சில வருடங்களாக வளர்த்து வந்த தாடியை எடுத்து விட்டார். தாடி இல்லாத தன்னுடைய படத்தை சமூக வலைதளங்களில் இவர் வெளியிட்டுள்ளார். மாற்றம் இல்லாதது மாற்றத்துக்கு மட்டும் தான் என்று தன்னுடைய படத்துக்கு கீழே அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post அமைச்சர் வேலையை ஒழுங்காக பாருங்கள்; சுரேஷ் கோபி திரைப்படங்களில் நடிக்க ஒன்றிய அரசு தடை: பல வருடங்களாக படத்துக்காக வைத்திருந்த தாடியை எடுத்தார் appeared first on Dinakaran.

Read Entire Article