சென்னை: “அமைச்சரவையில் சில நகாசு வேலைகளை செய்ததன் மூலம் அமைச்சரவையில் சமூகநீதியை நிலைநாட்டி விட்டதாக திமுக பெருமைப்பட்டுக் கொள்ள முடியாது. பட்டியலினத்தவரின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் அமைச்சரவையின் அதிகாரப்படிநிலையில் முதல் 3 இடங்களிலோ அல்லது குறைந்தபட்சம் முதல் 5 இடங்களிலோ பட்டியலின சகோதரரோ, சகோதரியோ எப்போது நியமிக்கப் படுகிறார்களோ அப்போது தான் அமைச்சரவையில் சமூகநீதி என்பதை பேசும் தகுதி திமுகவுக்கு வரும்.” என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழக அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புதல்வர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். அமைச்சர்கள் மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கே.இராமச்சந்திரன் ஆகியோர் நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக செந்தில் பாலாஜி, முனைவர் கோவி.செழியன், பனைமரத்துப்பட்டி இராஜேந்திரன், ஆவடி நாசர் ஆகியோர் புதிய அமைச்சர்களாக்கப்பட்டுள்ளனர். புதிய வாய்ப்பு பெற்றவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.