
வாஷிங்டன்,
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 104 இந்தியர்கள் கடந்த வாரம் ராணுவ விமானத்தில் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இந்த நிலையில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை நாடு கடத்தும் நடவடிக்கையில் 2-வது கட்டமாக மேலும் 119 பேர் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். 119 இந்தியர்களுடன் அமெரிக்காவில் இருந்து புறப்பட்டுள்ள விமானம் இன்று (சனிக்கிழமை) இரவு 10 மணிக்கு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருப்பி அனுப்பப்படும் 119 இந்தியர்களில் 67 பேர் பஞ்சாப்பை சேர்ந்தவர்கள், 33 பேர் அரியானாவை சேர்ந்தவர்கள், 8 பேர் குஜராத்தை சேர்ந்தவர்கள், 3 பேர் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் தவிர கோவா, மராட்டியம் மற்றும் ராஜஸ்தானை சேர்ந்த தலா 2 பேர், இமாசலபிரதேசம் மற்றும் காஷ்மீரை சேர்ந்த தலா ஒருவரும் அடங்குவர்.பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அங்கிருந்து சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.