
புதுடெல்லி,
டெல்லியில் இருந்து அமெரிக்காவின் வாஷிங்டன் நகருக்கு நேற்று ஏர் இந்தியா விமானம் புறப்படு சென்றது. இந்த விமானம் வழக்கமாக ஆஸ்திரியாவின் வியன்னாவில் எரிபொருள் நிரப்ப தரையிறக்கப்படும். அந்த வகையில், வியன்னா விமானநிலையத்தில் ஏர் இந்தியா தரையிறக்கப்பட்டு, எரிபொருள் நிரப்பப்பட்டது. அப்போது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. இதையடுத்து விமானத்தில் தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் தொழில்நுட்ப நிபுணர்கள் ஈடுபட்டனர். ஆனால் சரி செய்யும் முயற்சி தோல்வியில் முடிந்தது.
இதனால், விமானம் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் வியன்னாவில் இறக்கிவிடப்பட்டனர். விமான சேவை ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா விமான நிர்வாகம் அறிவித்தது. நடு வழியில் பயணிகள் அனைவரும் இறக்கிவிடப்பட்டதால் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். சில மணி நேரம் கழித்து, பயணிகள் அனைவருக்கும் மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு அதில் அனுப்பி வைக்கப்பட்டனர். பயணத்தை தொடர விரும்பாத பயணிகளுக்கு முழுக்கட்டணமும் திருப்பி அளிக்கப்பட்டது.