அமெரிக்க நீதித்துறையின் உயர் பதவியில் இந்திய வம்சாவளி பெண் நியமனம் - டிரம்ப் அறிவிப்பு

6 months ago 23

வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப், ஜனவரி 20-ந்தேதி பதவி ஏற்க உள்ள நிலையில், தனது மந்திரிசபையில் இடம்பெறும் மந்திரிகள் மற்றும் பல்வேறு உயர் பதவிகளுக்கான நபர்களின் பெயர்களை அறிவித்து வருகிறார். இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் பலர் இடம்பெற்றுள்ளனர்.

அந்த வகையில், அமெரிக்க நீதித்துறையின் உயர் பதவிகளில் ஒன்றாக விளங்கும் சிவில் உரிமைகளுக்கான துணை தலைமை வழக்கறிஞர் பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த ஹர்மீத் தில்லான் என்ற பெண்ணை நியமனம் செய்வதாக டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சிவில் உரிமைகளை பாதுகாப்பதற்காக ஹர்மீத் தொடர்ந்து உழைத்து வருகிறார். அவர் நமது நாட்டின் தலைசிறந்த வழக்கறிஞர்களில் ஒருவரான அவர், சட்டப்பூர்வ வாக்குகள் அனைத்தும் எண்ணப்படுவதை உறுதிசெய்ய போராடுகிறார்.

ஹர்மீத் சீக்கிய மத சமூகத்தின் மரியாதைக்குரிய உறுப்பினர். நீத்துறையில் தனது புதிய பணியில், ஹர்மீத் நமது அரசியலமைப்பு உரிமைகளின் பாதுகாவலராக இருப்பார். மேலும் நமது சிவில் உரிமைகள் மற்றும் தேர்தல் சட்டங்களை நியாயமாகவும், உறுதியாகவும் செயல்படுத்துவார்" என்று டிரம்ப் கூறியுள்ளார்.

தற்போது 54 வயதாகும் ஹர்மீத் தில்லான், இந்தியாவின் சண்டிகர் நகரில் பிறந்தவராவார். சிறுவயதிலேயே அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த இவர், அங்குள்ள டார்த்மவுத் கல்லூரி மற்றும் விர்ஜீனியா சட்ட பல்கலைக்கழகத்தில் பயின்று பட்டம் பெற்று வழக்கறிஞராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த ஆண்டு, குடியரசுக் கட்சியின் தேசியக் குழுத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியடைந்தார். கடந்த ஜூலை மாதம் நடந்த குடியரசு கட்சியின் தேசிய மாநாட்டில், சீக்கிய மத பிரார்த்தனை (அர்தாஸ்) வாசித்த ஹர்மீத், இனவாத தாக்குதலுக்கு ஆளானார்.

இந்த நிலையில் தற்போது சிவில் உரிமைகளுக்கான துணை தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ளது குறித்து ஹர்மீத் தில்லான் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நமது நாட்டின் சிவில் உரிமைகள் திட்டப் பணிக்கு உதவுவதற்காக ஜனாதிபதி டிரம்ப் என்னை நியமித்தது குறித்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நமது மாபெரும் நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது. திறமை வாய்ந்த வழக்கறிஞர்கள் குழுவின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். வேலையை தொடங்குவதற்கு ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

I'm extremely honored by President Trump's nomination to assist with our nation's civil rights agenda. It has been my dream to be able to serve our great country, and I am so excited to be part of an incredible team of lawyers led by @PamBondi. I cannot wait to get to work! I… pic.twitter.com/L2NCA9m987

— Harmeet K. Dhillon (@pnjaban) December 10, 2024
Read Entire Article