அமெரிக்க இறக்குமதி பொருட்கள் அனைத்திற்கும்0% வரி விதிக்க இந்தியா முன்வந்துள்ளது: அதிபர் டிரம்ப் அறிவிப்பால் பரபரப்பு

2 hours ago 2

தோஹா: இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் அமெரிக்க பொருட்களுக்கு பூஜ்ஜிய சதவீத வரி விதிக்க இந்தியா முன்வந்திருப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை பெருக்கவும் அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபராக 2வது முறையாக பொறுப்பேற்ற பிறகு டொனால்ட் டிரம்ப் உலகளாவிய வர்த்தக யுத்தத்தை தொடங்கியிருக்கிறார். அமெரிக்க பொருட்களுக்கு பிற நாடுகள் விதிக்கும் அதே அளவுக்கான வரி விதிக்கும் பரஸ்பர வரி விதிப்பு முறையை கொண்டு வந்தார். இதில் குறிப்பாக அவர் இந்தியாவையே அதிகம் குற்றம்சாட்டினார். இந்தியா வரிகளின் ராஜா என்றும், 100 சதவீதத்திற்கும் அதிகமான வரி விதிக்கிறது என்றும் கடுமையாக விமர்சித்தார். இதனால், பரஸ்பர வரி விதிப்பின் கீழ் இந்தியாவுக்கு 26 சதவீத வரியை டிரம்ப் விதித்துள்ளார். பரஸ்பர வரியால் பாதிக்கப்பட்ட 75 நாடுகள் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்ததைத் தொடர்ந்து வரும் ஜூலை 9ம் தேதி வரையிலும் 90 நாட்களுக்கு இப்புதிய வரியை டிரம்ப் நிறுத்தி வைத்துள்ளார்.

பரஸ்பர வரியிலிருந்து விலக்கு பெற இந்தியா சார்பில் ஒன்றிய வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயல் அமெரிக்காவில் தங்கியிருந்து அந்நாட்டு அதிகாரிகளுடன் இருதரப்பு ஒப்பந்தத்தை முடிவு செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். கடந்த ஒரு மாதமாக இந்திய அதிகாரிகள் அமெரிக்காவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சூழலில், மத்திய கிழக்கு நாடுகளுக்கு 4 நாள் சுற்றுப்பயணமாக சென்றுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், கத்தார் தலைநகர் தோஹாவில் நேற்று பல்வேறு தொழில் அதிபர்களுடன் வட்டமேஜை மாநாட்டில் பங்கேற்றார். அப்போது அவர், அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா பூஜ்ஜிய சதவீத வரி விதிக்க முன்வந்திருப்பதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார்.

இது குறித்து அதிபர் டிரம்ப் கூறியதாவது:
உலகிலேயே மிக உயர்ந்த வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதிகமான வரி காரணமாக இந்தியாவில் விற்பனை செய்வது மிகவும் கடினமாகிறது. இந்தியாவில் வர்த்தகம் செய்வதில் நாங்கள் முதல் 30 இடத்தில் கூட இல்லை. தற்போது அவர்கள் எங்களுடன் ஒரு ஒப்பந்தத்தை செய்து கொள்ள முன்வந்துள்ளனர். அதாவது, அமெரிக்காவின் அனைத்து இறக்குமதி பொருட்களுக்கும் எந்த வரியும் வசூலிக்காத பூஜ்ஜிய வரி விதிப்புக்கு தயாராக உள்ளனர். மிக அதிக வரி விதிக்கும் கட்டத்தில் இருந்து இப்போது பூஜ்ஜிய வரி விதிப்புக்கு இறங்கி வந்துள்ளார். இதைத்தான் வித்தியாசம் என்று கூறுவீர்களா? கடும் நடவடிக்கையின் மூலம் உச்சகட்ட வரியிலிருந்து பூஜ்ஜிய வரிக்கு இறங்கி வந்துள்ளனர். இவ்வாறு டிரம்ப் கூறி உள்ளார்.

மேலும், இந்தியாவில் ஐபோன் ஆலை விரிவாக்கத்திற்கும் டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், ‘‘எனக்கும், டிம் குக்கிற்கும் (ஆப்பிள் நிறுவன சிஇஓ) சின்ன பிரச்னை. ஆப்பிள் நிறுவனம் அமெரிக்காவில் கூடுதலாக 500 பில்லியன் டாலர் முதலீடு செய்ய முன்வந்துள்ளது. ஆனால், இந்தியாவில் பல்வேறு இடங்களில் ஆலைகளை விரிவுபடுத்தவும் இருப்பதாக நான் கேள்விப்பட்டேன். இந்தியாவில் ஆலைகள் கட்ட வேண்டும் என்றால், இந்தியாவின் வளர்ச்சியில் நீங்கள் அக்கறை கொள்ள வேண்டும். உலகிலேயே அதிகமான வரி விதிக்கும் நாடு இந்தியா. நீங்கள் அங்கு அவ்வளவு எளிதில் விற்பனை செய்ய முடியாது. எனவே நான் டிம் குக்கிடம் நேரடியாக பேசினேன். உங்களை நாங்கள் நன்றாக கவனித்துக் கொள்கிறோம். நீங்கள் எங்கள் நண்பர்.

சீனாவில் பல ஆண்டுகள் ஆலைகளை விரிவுபடுத்தும் போதுகூட நாங்கள் எதுவும் சொல்ல வில்லை. ஆனால் இப்போது இந்தியாவில் ஆலைகள் அமைப்பதை நாங்கள் விரும்பவில்லை. இந்தியாவின் வளர்ச்சியை அவர்களை அவர்களே பார்த்துக் கொள்வார்கள். ஐபோன் உற்பத்தியை அமெரிக்காவில் அதிகப்படுத்த வேண்டுமென குக்கிடம் கேட்டுக் கொண்டுள்ளேன்’’ என்றார்.

சீனாவுடன் அமெரிக்கா கடுமையான வர்த்தக போரில் ஈடுபட்டுள்ள நிலையில், ஆப்பிள் நிறுவனம் இந்தியா மீது கவனம் செலுத்தி வருகிறது. ஜூன் மாதம் வரையிலான காலாண்டில் அமெரிக்காவில் விற்கப்பட்ட ஐபோன்களில் பெரும்பாலானவை இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டவை. கடந்த ஆண்டு 7.59 கோடி ஐபோன்கள் அமெரிக்காவில் விற்பனையாகி உள்ளன. கடந்த மார்ச்சில் மட்டும் இந்தியாவில் இருந்து 31 லட்சம் ஐபோன்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திய அமெரிக்கா, வர்த்தகத்தை நிறுத்தி விடுவதாக இந்தியாவை மிரட்டி பணிய வைத்ததாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில், பூஜ்ஜிய வரிக்கு ஒப்புதல், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் ஆலை விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு போன்ற டிரம்பின் பேச்சுகள் மேலும் சந்தேகத்தை வலுக்கச் செய்துள்ளன.

ஆப்பிள் முதலீட்டு திட்டங்களில் மாற்றம் இல்லை
அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சைத் தொடர்ந்து இந்திய அதிகாரிகள், ஆப்பிள் நிறுவனத்துடன் பேசி உள்ளனர். அதைத் தொடர்ந்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஆப்பின் நிறுவனத்தின் இந்திய முதலீட்டு திட்டங்களில் எந்த மாற்றமும் இல்லை. அவை அப்படியே உள்ளன. ஐபோன் தயாரிப்புகளுக்கான முக்கிய உற்பத்தி தளமாக இந்தியாவை தொடர்ந்து வைத்திருக்க ஆப்பிள் விரும்புகிறது’’ என்றனர். ஆனால் இது தொடர்பாக ஆப்பிள் நிறுவனத்திற்கு நேரடியாக அனுப்பப்பட்ட இமெயிலுக்கு எந்த பதிலும் வரவில்லை என செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

பிரதமர் மோடி மவுனம் ஏன்?
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பதிவில், ‘‘வர்த்தக அமைச்சர் வாஷிங்டனில் இருக்கிறார். ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்ப் தோஹாவில் பிரமாண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதற்கு பிரதமர் மோடியிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. அவர் எதற்கு ஒப்புக் கொண்டார்? இதற்கும் ஆபரேஷன் சிந்தூர் நிறுத்தத்திற்கும் என்ன தொடர்பு உள்ளது?’’ என கேள்வி கேட்டதுடன். டிரம்பின் பேச்சுக்களையும் டேக் செய்துள்ளார்.

ஜெய்சங்கர் மறுப்பு
டிரம்ப் அறிவிப்பு குறித்து ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் அளித்த பேட்டியில், ‘‘அமெரிக்காவுடனான எந்தவொரு வர்த்தக ஒப்பந்தமும் பரஸ்பரம் இரு நாடுகளுக்கும் நன்மை பயக்கும் வகையில் இருக்க வேண்டும். இதுதான் எங்கள் எதிர்பார்ப்பு. இது தொடர்பாக முடிவெடுக்கப்படும் வரை முன்கூட்டிய எந்த அறிவிப்புகளும் வெறும் கணிப்புகள்தான்’’ என்றார். வர்த்தக செயலாளர் சுனில் பர்த்வால் பேட்டியில், ‘‘இந்தியா, அமெரிக்கா இடையேயான இருதரப்பு வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை சிறப்பாக முன்னேற்றம் அடைந்துள்ளது. மேலும் விவாதங்களுக்காக இந்திய குழு வாஷிங்டனுக்கு செல்ல இருக்கிறது. இக்குழு நாளை முதல் 20ம் தேதி வரை அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரீர் மற்றும் வர்த்தக அமைச்சர் ஹோவர்ட் லுட்னிக் ஆகியோருடன் சந்திப்புகளை நடத்தும்’’ என்றார்.

The post அமெரிக்க இறக்குமதி பொருட்கள் அனைத்திற்கும்0% வரி விதிக்க இந்தியா முன்வந்துள்ளது: அதிபர் டிரம்ப் அறிவிப்பால் பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article