அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற கமலா ஹாரிஸ் பூர்வீக கிராமமான மன்னார்குடியில் சிறப்பு பிரார்த்தனை

2 weeks ago 3

மன்னார்குடி: அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டி அவரது பூர்வீக கிராமமான மன்னார்குடியில் கிராம மக்கள் நேற்று சிறப்பு பிரார்த்தனை செய்து வழிபட்டனர். உலகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் அமெரிக்காவின் 47வது அதிபர் தேர்தல் நேற்று நடந்தது. ஜனநாயக கட்சி சார்பில் தற்போது துணை அதிபராக உள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த பைங்காநாடு துளசேந்திரபுரத்தை பூர்வீகமாக கொண்டவர். கமலா ஹாரிசின் தாய்வழி தாத்தா பி.வி.கோபாலன், பாட்டி ராஜம் ஆகியோர் இந்த கிராமத்தில் வாழ்ந்தனர். கோபாலன் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்திய அரசு பணியில் இருந்தார்.

பின்னர் 1930ல் ஜாம்பியா நாடு விடுதலைப் பெற்ற போது, அங்குள்ள அகதிகளுக்கு நிர்வாக உதவிகள் வழங்க அங்கு பணியமர்த்தப்பட்டார். 1960களில் ஜாம்பியாவில் பதவியேற்ற முதல் ஜனாதிபதியின் ஆலோசகராகவும் பணியாற்றினார். அப்போது அவர் குடும்பத்துடன் அங்கு குடிபெயர்ந்தார். இவரது மகள்கள் ஷியாமளா, சரளா. ஷியாமளா ஜமைக்கா நாட்டை சேர்ந்த கருப்பினத்தவரான டொனால் ஹாரீஸ் என்பவரை திருமணம் செய்தார். அவர்களது மகள்கள் கமலா, மாயா. இந்த கமலா ஹாரிஸ் தான் அமெரிக்க துணை அதிபராக இருந்து தற்போது ஜனநாயக கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் வேட்பாளர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டி அவரது பூர்வீக கிராமமான மன்னார்குடி அடுத்த பைங்காநாடு துளசேந்திரபுரத்தில் உள்ள அவரது குலதெய்வ கோயிலான தர்ம சாஸ்தா கோயிலில் கிராம மக்கள் நேற்று காலை சிறப்பு பிரார்த்தனை செய்தனர். இதில் அமெரிக்காவிலிருந்து வந்த கமலா ஹாரிசின் 3 தீவிர பெண் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர். சென்னையில் 1991ல் நடந்த தனது தாத்தா கோபாலனின் 80வது பிறந்த நாளில் கமலா ஹாரிஸ் பங்கேற்றார். இந்நிலையில் மன்னார்குடி அடுத்த துளசேந்திரபுரம் குலதெய்வ கோயிலுக்கு கடந்த 2020ல் கமலாவின் சித்தி சென்னையில் வசிக்கும் பிரபல மருத்துவரான சரளா கோபாலன் வந்து, கமலா ஹாரிஸ் பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்தார். அவரது வருகை அப்போது ரகசியமாக வைக்கப்பட்டது.

அதன்பிறகு துணை அதிபருக்கு போட்டியிட்டபோதும் அவர் சிறப்பு அர்ச்சனை செய்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘எங்கள் கிராமத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ், ஏற்கனவே அமெரிக்க துணை அதிபராக உள்ள நிலையில் தற்போது அதிபர் பதவிக்கு போட்டியிடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. கண்டிப்பாக அவர் வெற்றி பெறுவார். அவரது வெற்றிக்காக அவரது குலதெய்வ கோயிலான துளசேந்திரபுரத்தில் உள்ள தர்ம சாஸ்தா கோயிலில் நாங்கள் சிறப்பு அபிஷேக அர்ச்சனை செய்து வழிபட்டோம். அவர் வெற்றி பெற்று ஒரு முறையாவது எங்கள் கிராமத்துக்கு வருவார் என எதிர்பார்த்துள்ளோம்’ என்றனர்.

The post அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற கமலா ஹாரிஸ் பூர்வீக கிராமமான மன்னார்குடியில் சிறப்பு பிரார்த்தனை appeared first on Dinakaran.

Read Entire Article