புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டிரம்பின் கொண்டு வந்த பரஸ்பர வரிக்கான கெடு இன்றோடு முடியும் நிலையில், வரும் ஆகஸ்ட் 1ம் தேதியில் இருந்தே இந்த வரி அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய ஏற்றுமதியாளர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் அமெரிக்காவுடன் இந்தியா இருதரப்பு இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க பொருட்களுக்கு பிற நாடுகள் எவ்வளவு வரி விதிக்கிறதோ, அதே அளவு வரியை அந்தந்த நாடுகளின் இறக்குமதி பொருட்களுக்கு விதிக்கும் வகையில் அதிபர் டிரம்ப் பரஸ்பர வரி விதிப்பு முறையை கடந்த ஏப்ரல் 2ம் தேதி அறிவித்தார்.
இதன்படி, இந்திய பொருட்களுக்கு 26 சதவீத வரி விதிக்கப்படும் என அதிபர் டிரம்ப் கூறினார். இது, அமெரிக்காவுக்கு பொருட்களை அனுப்பும் இந்திய ஏற்றுமதியாளர்களும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. மேலும், பல நாடுகள் மீது பரஸ்பர வரியை டிரம்ப் அறிவித்தார். ஆனால் இந்த வரிகளை அமல்படுத்துவதை 90 நாட்களுக்கு அவர் ஒத்திவைத்தார். அதற்குள் அனைத்து நாடுகளும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டுமென அதிபர் டிரம்ப் கூறினார்.
அதைத் தொடர்ந்து, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் அமெரிக்காவுடன் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள கடந்த 3 மாதமாக பேச்சுவார்த்தை நடத்தின. இந்தியாவைப் பொறுத்த வரையில் வரும் செப்டம்பர் அல்லது அக்டோபரில் முதற்கட்ட ஒப்பந்தத்தை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதற்கு முன்பாக இருநாடுகளும் இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய பேச்சுவார்த்தை நடத்தின. வேளாண், காலணி, ஜவுளித்துறையில் உடன்பாடு ஏற்படுவதில் சிக்கல் நிலவியது. ஆனாலும் இந்த விவகாரத்தில் இந்தியா தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி விட்டதாகவும், இனி அமெரிக்கா தான் முடிவெடுக்க வேண்டிய கட்டத்தில் இருப்பதாகவும் வர்த்தக அமைச்சக அதிகாரிகள் கடந்த வாரம் தகவல் தெரிவித்தனர்.
இந்நிலையில், அதிபர் டிரம்ப் விதித்த 90 நாள் கெடு இன்றோடு முடிவுக்கு வருகிறது. இதற்கு முன்பாகவே, அதிபர் டிரம்ப் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யாத 14 நாடுகளுக்கு பரஸ்பர வரி விகிதத்தை உறுதி செய்து அந்தந்த நாடுகளுக்கு நேற்று முன்தினம் நிர்வாக உத்தரவு கடித்ததை அனுப்பி வைத்தார். இப்பட்டியலில் இந்தியா இடம் பெறவில்லை. 90 நாள் கெடு இன்றோடு முடிந்தாலும், வரும் ஆகஸ்ட் 1ம் தேதியில் இருந்தே பரஸ்பர வரி விதிப்புகள் கணக்கில் கொள்ளப்படும் என அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய நிலுவையில் உள்ள பிரச்னைகளை தீர்க்க இந்தியாவுக்கு கூடுதல் நேரத்தை வழங்குகிறது. இதன் மூலம் இந்திய ஏற்றுமதியாளர்களும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
இது குறித்து, இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பு (எப்ஐஇஓ) இயக்குநர் ஜெனரல் அஜய் சஹாய் கூறுகையில், ‘‘ஆகஸ்ட் 1ம் தேதி வரை கூடுதல் வரி விதிப்பதை ஒத்திவைப்பது அமெரிக்கா தனது வர்த்தக கூட்டாளிகளுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையில் ஈடுபட விரும்புவதை காட்டுகிறது. இந்தியாவை பொறுத்த வரையில் இது எஞ்சிய பிரச்னைகளை தீர்த்துக் கொள்ள அவகாசம் வழங்கும். அமெரிக்காவுடன் குறைந்தபட்ச பொருட்கள் மீது இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்தால் அது நமக்கு அதிக நன்மைகள் வழங்கக் கூடும்’’ என்றார்.
சர்வதேச வர்த்தக நிபுணர் பிஸ்வஜித் தார் கூறுகையில், ‘‘இது இந்தியாவுக்கு கிடைத்த நிவாரணமாக பார்க்கிறேன். சில விஷயங்களில் இந்தியா வலுவான நிலைப்பாட்டை கொண்டிருக்கிறது’’ என்றார். கடந்த 2021-22ம் நிதியாண்டு முதல் அமெரிக்கா இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக உள்ளது. 2024-25ம் ஆண்டில், இருதரப்பு வர்த்தகம் 131.84 பில்லியன் அமெரிக்க டாலர்களாக (ஏற்றுமதி 86.51 பில்லியன் டாலர், இறக்குமதி 45.33 பில்லியன் டாலர் மற்றும் வர்த்தக பற்றாக்குறை 41.18 பில்லியன் டாலர்) இருந்தது குறிப்பிடத்தக்கது.
* இந்தியா-பாகிஸ்தான் போரை வர்த்தகம் மூலம் நிறுத்தினேன்
இந்தியா, பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் தன்னால் தான் ஏற்பட்டது என தொடர்ந்து கூறி வரும் அதிபர் டிரம்ப், வர்த்தகம் மூலம் தான் இரு நாடுகளையும் பணிய வைத்ததாக மீண்டும் ஒருமுறை கூறி இருக்கிறார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்புக்கு பிறகு அவர் அளித்த பேட்டியில், ‘‘நாங்கள் நிறைய போர்களை நிறுத்தினோம். அதில் மிகப்பெரியது இந்தியா, பாகிஸ்தான் இடையேயான போர். அதை வர்த்தகத்தை வைத்து நிறுத்தினோம். நீங்கள் சண்டையிடப் போகிறீர்கள் என்றால் நாங்கள் ஒருபோதும் வர்த்தகம் செய்ய மாட்டோம் என கூறினோம். இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளும் அணுசக்தி பலம் கொண்ட நாடுகள் என்பதால் அவர்களுக்கு இடையேயான போரை நிறுத்துவது மிகவும் முக்கியமானது என நான் நினைக்கிறேன்’’ என்றார்.
* இந்தியாவுடன் ஒப்பந்தத்தை நெருங்கி விட்டோம்
அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில், ‘‘இப்போது, நாங்கள் இங்கிலாந்து, சீனாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டோம். இந்தியாவுடனான ஒப்பந்தத்தை நெருங்கிவிட்டோம். சில நாடுகளுடன் ஒப்பந்தத்தை முடிக்க முடியாது என கருதுகிறோம். அவர்களுக்கு வரி குறித்து கடிதம் அனுப்புகிறோம். ஒப்பந்தம் செய்யத் தவறும் யாருக்கும் இதுதான் நடக்கும்’’ என்றார்.
எந்தெந்த நாட்டிற்கு எவ்வளவு வரி விதிப்பு
அமெரிக்காவுடன் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தில் உடன்பாடு எட்டப்படாத 14 நாடுகளுக்கு முதற்கட்டமாக அதிபர் டிரம்ப் கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அந்தந்த நாடுகளுக்கு எவ்வளவு வரி என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடுகள் வரி விகிதம்
ஜப்பான் 25%
தென் கொரியா 25%
மியான்மர் 40%
லாவோஸ் 40%
கம்போடியா 36%
தாய்லாந்து 36%
செர்பியா 35%
வங்கதேசம் 35%
இந்தோனேசியா 32%
தென் ஆப்ரிக்கா 30%
போஸ்னியா 30%
கஜகஸ்தான் 25%
மலேசியா 25%
துனிசியா 25%
The post அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த கெடு இன்றோடு முடிகிறது பரஸ்பர வரி தற்காலிக நிறுத்தம் ஆகஸ்ட் 1ம் தேதி வரை நீட்டிப்பு: இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு நிவாரணம் appeared first on Dinakaran.