சென்னை: அம்பேத்கரை இழிவாகப் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி தமிழ்நாட்டின் மாவட்டத் தலைநகரங்களில் காங்கிரஸ் கட்சியினர் நாளை (டிச.24) ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர் என்று அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினரும் மேகாலயா, மிசோராம், அருணாசலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களின் காங்கிரஸ் பொறுப்பாளருமான டாக்டர் ஏ.செல்லக்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''நாடாளுமன்ற விவாதத்தின்போது அம்பேத்கர் பற்றி உள்துறை அமைச்சர் அமித் ஷா கேலியாகவும் இழிவாகவும் பேசியுள்ளார். அந்தப் பேச்சு நாலாந்தர பேச்சாளர், தெருமுனை பேச்சாளரைப் போல இருந்தது. நாட்டு மக்களுக்கு சம உரிமை, சமத்துவம், சுதந்திரத்தை வழங்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்துக் கொடுத்த அம்பேத்கரை கொச்சைப்படுத்திப் பேசுவது வேதனையளிக்கிறது. அது மிகவும் கண்டிக்கத்தக்கது.