அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்: விசாரணை 29ம் தேதிக்கு தள்ளிவைப்பு

3 months ago 19

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்க துறை பதிவு செய்த வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜி 2023 ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்டார். அவருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதையடுத்து 15 மாத சிறைவாசத்துக்கு பின் செந்தில் பாலாஜி கடந்த வாரம் விடுதலையானார். அவருக்கு எதிரான அமலாக்க துறை தொடர்ந்த வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

கடந்த வாரம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜராகியிருந்தார். அன்றையதினம் ஆஜராகாத அமலாக்கத் துறை தரப்பு சாட்சியான தடயவியல் துறை உதவி இயக்குனர் மணிவண்ணனுக்கு எதிராக நீதிமன்றம் வாரன்ட் பிறப்பித்தது. இந்த வழக்கு முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜராகியிருந்தார். அமலாக்க துறை சாட்சியான மணிவண்ணனும் ஆஜராகியிருந்தார்.

அப்போது செந்தில்பாலாஜி தரப்பு மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை முடிக்காமல் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை விசாரிக்க முடியுமா? என்று உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் பெற உள்ளதால் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்றார்.

அதை ஏற்க மறுத்த நீதிபதி, சாட்சி விசாரணை தொடரும் என்றார். இதையடுத்து, தடயவியல் துறை உதவி இயக்குனர் மணிவண்ணனிடம் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் ம.கவுதமன் குறுக்கு விசாரணை செய்தார். தடயவியல் துறை உதவி இயக்குனர் மணிவண்ணனிடம் குறுக்கு விசாரணை நிறைவடையாததால் விசாரணையை வரும் 29ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

 

The post அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்: விசாரணை 29ம் தேதிக்கு தள்ளிவைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article