
சென்னை,
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் இந்த படத்தில் 'முகுந்தன்' என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். புவன் அரோரா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
'அமரன்' திரைப்படம் வருகிற 31-ந் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடி வீர மரணமடைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் கதையை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
சமீபத்தில் இந்த படத்தில் இருந்து ஹே மின்னலே பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அடுத்தது இந்த படத்தின் டிரெய்லர் வருகின்ற 18ம் தேதி வெளியாகும் எனவும் அதே தேதியில் படத்தின் இசை வெளியீட்டு விழாவும் நடைபெற இருப்பதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமரன் திரைப்படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், ராஜ்குமார் பெரியசாமி, சாய்பல்லவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அந்த விழாவில் படம் குறித்த சில தகவல்களை பட குழுவினர் பகிர்ந்தனர். இது தொடர்பான வீடியோவை படக்குழு இணையத்தில் வெளியிட்டுள்ளது.
அதன்படி நேற்று முதல் எபிசோடு வெளியானது. அதைத் தொடர்ந்து இன்று இரண்டாவது எபிசோடு வெளியாகி உள்ளது. அந்த விழாவில் பேசிய சிவகார்த்திகேயன் தனது தந்தையை நினைவுகூர்ந்துள்ளார். அதாவது சிறுவயதிலிருந்தே யூனிபார்மை பார்த்து வளர்ந்ததாகவும் நிறம் வேறுபாடாக இருந்தாலும் பொறுப்பு ஒன்று தான் எனவும் தெரிவித்திருக்கிறார். அடுத்தது முகுந்துக்கும் தன்னுடைய தந்தைக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
சிவகார்த்திகேயனின் தந்தை போலீஸ் அதிகாரியாக பணியாற்றி உயிரிழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.