சென்னை: ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து இன்று திரையரங்கில் வெளியாகியிருக்கும் படம் ‘அமரன்’. ராஜ்கமல் பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ள நிலையில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையைத் தழுவி இப்படம் உருவாகியுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாகவும், முகுந்தின் மனைவி இந்துவாக நடிகை சாய் பல்லவியும் நடித்துள்ளனர். உலகளவில் சுமார் 900க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் அமரன் திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் சிறப்பு காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர் சிவகார்த்திகேயன், துணை முதல்வர் உதயநிதி மற்றும் பட தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் பார்த்து மகிழ்ந்தனர்.
படத்தை பார்த்த பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், “நண்பர் கலைஞானி கமல்ஹாசனின் அன்பு அழைப்பை ஏற்று, ‘அமரன்’ திரைப்படம் பார்த்தேன். புத்தகங்களைப் போல் – திரைப்பட வடிவிலும் உண்மைக் கதைகளை இன்றைய இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களது வீரத்தையும் அர்ப்பணிப்பையும் உணர்வுப்பூர்வமாகப் படமாக்கியுள்ள இயக்குநர் ராஜ்குமார், மேஜர் முகுந்த் வரதராஜன் – இந்து ரெபேக்கா வர்கீஸ் ஆகியோரது பாத்திரங்களைத் தங்களது நடிப்பால் சிறப்பாக வெளிப்படுத்திய தம்பி சிவ கார்த்திகேயன், சாய்பல்லவி மற்றும் ‘அமரன்’ படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்! நாட்டைப் பாதுகாக்கும் நமது ராணுவ வீரர்களுக்கும் – நம் நினைவில் வாழும் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களுக்கும் பிக் சல்யூட்” என பதிவிட்டிருந்தார்.
இந்த சூழலில் ‘அமரன்’ படத்தை பாராட்டிய முதல்வருக்கு நடிகர் சிவகார்த்திகேயன் நன்றி தெரிவித்திருந்தார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “தங்களின் நேரத்தை ஒதுக்கி ‘அமரன்’ திரைப்படத்தை பார்த்து, எங்கள் அனைவரின் உழைப்பையும் பாராட்டிய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். ஒரு அரசு அதிகாரியின் மகனான எனக்கு இந்த நிகழ்வு மறக்க முடியாதது” என்று பதிவிட்டிருந்தார். இந்நிலையில் ‘அமரன்’ படத்தை பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது: எங்களது அழைப்பை ஏற்று அமரன் திரைப்படத்தைப் பார்த்து ரசித்ததோடு, படத்தையும், அதில் பங்களிப்பாற்றிய கலைஞர்களையும் மனதார பாராட்டிய தமிழ்நாடு முதல்வரும், என் அன்பிற்கினிய நண்பருமான மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழ்நாட்டின் துணை முதல்வரும், என் அன்பு இளவலுமான உதயநிதி ஸ்டாலினுக்கும் எங்களது மனமார்ந்த நன்றி. முதல்வரின் பாராட்டு அமரனின் பெரும் வெற்றிக்கு அறிகுறி. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post அமரனின் பெரும் வெற்றிக்கு அறிகுறி.! படத்தை பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு படத்தின் நன்றி தெரிவித்த தயாரிப்பாளர் கமல்ஹாசன் appeared first on Dinakaran.