![](https://media.dailythanthi.com/h-upload/2025/01/29/36421938-dcadg.webp)
புதுடெல்லி,
அரியானாவில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், அரியானாவில் இருந்து யமுனை ஆற்றுக்கு வரும் நீரில் விஷம் கலக்கப்பட்டு உள்ளது என ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் சமீபத்தில் குற்றச்சாட்டுகளை கூறினார். டெல்லி சட்டசபைக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ள சூழலில், அவருடைய இந்த குற்றச்சாட்டு டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கெஜ்ரிவால் கூறும்போது, யமுனை ஆற்றில் விஷம் கலக்கப்பட்டு மக்களை சென்றடைவதற்கு முன்பு டெல்லி நீர் வாரியத்தின் என்ஜினீயர்கள் சரியான தருணத்தில் கண்டறிந்து, தடுத்தனர். இல்லையெனில் இனப்படுகொலை எனும் அளவுக்கு அதிக அளவிலான மக்கள் கொல்லப்பட்டு இருப்பார்கள். நீருடன் விஷம் கலப்பதற்கு முன்பே அது தடுக்கப்பட்டது என கூறினார்.
இந்நிலையில், டெல்லி துணைநிலை கவர்னர் வினய் குமார் சக்சேனாவுக்கு எதிராக, முதல்-மந்திரி அதிஷி இன்று அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.
அதிஷிக்கு நேற்று சக்சேனா கடிதம் ஒன்றை எழுதினார். அதில், யமுனை ஆற்றில் விஷம் கலப்பு என கெஜ்ரிவால் கூறிய விசயங்களுக்கு தன்னுடைய எதிர்ப்புகளை வெளிப்படுத்திய அவர், பொய்யான, தவறாக வழிநடத்த கூடிய மற்றும் உண்மையற்ற விசயங்களை முன்னிறுத்துகிறார் என குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், அதிஷி இன்று கூறும்போது, டெல்லியின் நீரில் அதிக அளவு ஆபத்து ஏற்படுத்த கூடிய அம்மோனியா உள்ளது என்ற விவகாரம் பற்றி பேசுவதற்கு பதிலாக, அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி, உங்களுடைய பொறுப்புகளை நிறைவேற்றாமல் முழுமையாக தோல்வியடைந்த நிலையில் இருந்து திசை திருப்புவதற்காக பொய்யான விசயங்களை கூறி வருவது ஆச்சரியமளிக்கிறது. இது ஆழ்ந்த அதிருப்தியை ஏற்படுத்துகிறது என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து அதிஷி கூறும்போது, டெல்லி கவர்னராக அரசியல் சாசனத்தின்படி, அவருடைய பொறுப்புணர்வு என்பது டெல்லி மக்களை நோக்கி இருக்க வேண்டும். அதற்கு பதிலாக உங்களுடைய அரசியல் தலைவர்களான பா.ஜ.க.வை நோக்கி இருக்க கூடாது.
ஆனால், டெல்லி குடிமக்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பதிலோ அல்லது அரசியலமைப்பை நிலைநிறுத்துவதிலோ இல்லாமல், பா.ஜ.க.வின் உத்தரவுகளை நிறைவேற்றுவதிலேயே உங்களுடைய முதன்மையான ஆர்வம் உள்ளது என உங்களுடைய செயல்பாடுகள் வெளிப்படுத்துகின்றன என்றும் குற்றச்சாட்டாக கூறினார்.
உங்களுடைய அழுத்தத்தின்பேரில், அதிகாரி ஒருவர், இந்த விஷ நீர் விநியோகம் சரியென கூறுவதற்கான முயற்சியில் ஈடுபட வலுகட்டாயப்படுத்தப்பட்டு இருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது.
ஆனால், உங்களுடைய கடிதத்தில் கூட, அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக 700 சதவீதம் அளவுக்கு அம்மோனியா உள்ளது என குறிப்பிடப்பட்டு உள்ளது.
நீங்களும், டெல்லி நீர் வாரியத்தின் முதன்மை செயல் அதிகாரியும், கெஜ்ரிவால் சுட்டி காட்டிய, எச்சரிக்கைக்குரிய உண்மையான விசயங்களை, திறமையான முறையில் உறுதி செய்திருக்கிறீர்கள். இந்த நெருக்கடியான சூழலில், உங்களுக்கு 2 வாய்ப்புகள் உள்ளன.
அது, பொதுமக்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது அல்லது உங்களுடைய அரசியல் நலனுக்கு வளைந்து கொடுப்பது. துரதிர்ஷ்ட வகையில், நீங்கள் 2-வது வாய்ப்பை தேர்ந்தெடுத்து உள்ளீர்கள் என கூறியுள்ளார்.