மன்னர் நகர்வலம் வருகிறார். ஓரிடத்தில் ஓர் அழகான நிலம் அவரைக் கவர்ந்தது. அந்த நிலத்தில் தமக்கென்று ஒரு மாளிகையையும் தோட்டத்தையும் அமைக்க விரும்பினார்.அந்த நிலம் ஓர் ஏழைக் கிழவிக்குச் சொந்தமானது. “உன் நிலத்தை மன்னர் விரும்புகிறார். உரிய விலை தரப்படும்” என்று அரண்மனைக் காவலர்கள் கூறினர்.கிழவி மறுத்தாள். “இது எங்கள் பரம்பரை நிலம். நானும் என் கணவரும் வாழ்ந்த இடம். எவ்வளவு விலை தந்தாலும் விற்பதற்கில்லை” என்று உறுதிபட உரைத்தாள் கிழவி.அதிகார மையத்தின் காதுகளில் ஏழைகளின் குரல் என்றைக்கு விழுந்தது? ஆட்சி அதிகாரம் இருக்கும் ஆணவத்தில் மன்னர் அந்த நிலத்தைக் கைப்பற்ற ஆணையிட்டார்.நிலம் அபகரிக்கப்பட்டது. கிழவி வெளியேற்றப்பட்டாள். அபகரிக்கப்பட்ட நிலத்தில் மன்னரின் மனம் மகிழும் வண்ணம் மாளிகையும் எழில் மிகுந்த தோட்டமும் உருவாயின.கிழவி நீதிமன்றம் சென்று முறையிட்டாள். அந்த ஏழை மூதாட்டியின் கண்ணீரையும் அவள் பக்கமிருந்த நியாயத்தையும் உணர்ந்துகொண்ட நீதிபதி அவளுக்கு உதவ வேண்டும் எனத் தீர்மானித்தார். மன்னர் செய்தது மாபெரும் தவறு என அவருக்கு உணர்த்த வேண்டும்.புதிய மாளிகை திறப்பு விழா. மன்னரிடமிருந்து நீதிபதிக்கும் அழைப்பு வந்தது- விழாவில் கலந்துகொள்ளும்படி. நீதிபதி ஒரு கழுதையுடனும் நாலைந்து சாக்குப் பைகளுடனும் வந்தார்.மன்னருக்கு வியப்பு- இவரை விழாவுக்கு அழைத்தால் கழுதையுடன் வருகிறாரே என்று.
“மன்னா..”
“சொல்லுங்கள் நீதியரசரே?”
“உங்கள் தோட்டத்தில் இருந்து
கொஞ்சம் மண் வேண்டும்.”
“எவ்வளவு வேண்டுமானாலும்
எடுத்துக் கொள்ளுங்கள்.”
நீதிபதி இரண்டு மூன்று சாக்குப் பை களில் மண்ணை நிரப்பினார். பிறகு மன்னரை நோக்கி, “அரசே, இந்தச் சாக்குப் பையைத் தூக்கிக் கழுதையின் முதுகில் வைக்க உதவுங்கள்” என்றார்.மன்னர் அந்தச் சாக்குமூட்டையைத் தூக்க முயன்றார். ஊஹும்.. எவ்வளவு முயன்றும் அவரால் தூக்க முடியவில்லை. அவ்வளவு கனம்.நீதிபதி அமைதியாகக் கூறினார்- “அரசே, இந்த ஒரு மூட்டை மண்ணையே உங்களால் தூக்க முடியவில்லையே. ஓர் ஏழை மூதாட்டியிடமிருந்து அபகரிக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்ட இந்த மாளிகையையும் தோட்டத்தையும் சுமக்கும்படி மறுமையில் இறைவன் கட்டளையிட்டால் என்ன செய்வீர்கள்? எப்படிச் சுமப்பீர்கள்?”நீதிபதி பின்வரும் வேத வசனத்தையும் ஓதிக் காட்டினார்.“எவர் வஞ்சனை செய்கிறாரோ அவர் மறுமை நாளில் தாம் செய்த வஞ்சனையுடன்தான் வருவார். ஒவ்வொரு மனிதனுக்கும் அவரவர் சம்பாதித்ததற்கான கூலி முழுமையாக வழங்கப்படும். அவர்கள் யார் மீதும் அநீதி இழைக்கப்பட மாட்டாது.”(குர்ஆன் 3: 161)மன்னரின் இதயம் இறையச்சத்தால் நடுங்கியது. உடனடியாக அந்த மூதாட்டி அங்கே வரவழைக்கப்பட்டார். மன்னர் கண்ணீருடன் கூறினார்.“அம்மா..என்னை மன்னித்து விடுங்கள். இந்த மாளிகை, தோட்டம் அனைத்தும் உங்களுக்கே சொந்தம்.”ஏழை எளியோர்களின், பலவீனமானவர்களின் சொத்துகளை அபகரிக்கும் போக்கு இன்றும் பரவலாக உள்ளது. சில அரசுகள் சட்டம் போட்டே நிலங்களை அபகரிக்கின்றன.இறைவனின் கடும் தண்டனைக்கு அவர்கள் அஞ்சிக் கொள்ளட்டும்.
– சிராஜுல் ஹஸன்.
இந்த வாரச் சிந்தனை
“எது பாவமானதாகவும் வரம்பு கடந்ததாகவும் உள்ளதோ அதில் எவருடனும் ஒத்துழையாதீர்கள். இறைவனை அஞ்சுங்கள். திண்ணமாக, அவனுடைய தண்டனை மிகக் கடுமையானது.” (குர்ஆன் 5:2)
The post அபகரித்தல் ஆபத்து..! appeared first on Dinakaran.