
கும்பகோணம்,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகனும் பா.ம.க. தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. கட்சியில் முழு அதிகாரம் தனக்கே உள்ளது என்று இருவரும் கூறி வருகின்றனர். அதுமட்டுமின்றி கட்சியில் தங்களது பலத்தை நிரூபிக்க இருவரும் போட்டி கூட்டத்தையும் நடத்துகிறார்கள்.
மேலும் அன்புமணியின் ஆதரவாளர்களை டாக்டர் ராமதாஸ் நீக்குவதும், அடுத்த சில நிமிடங்களில் நீக்கப்பட்டவர்கள் அதே பதவியில் தொடர்வார்கள் என்று அன்புமணி அறிவித்து அதிரடி காட்டுவதுமாக இருந்து வருகிறது. அதுமட்டுமின்றி இருவரும் மாறி மாறி ஒருவரையொருவர் பகிரங்கமாக குற்றம் சாட்டுவது மோதலின் உச்சத்தை காட்டுகிறது.
இந்த மோதலுக்கு இடையில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் காமராஜர் சாலையில் உள்ள எஸ்.இ.டி. மஹாலில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் தஞ்சை, திருவாரூர் மாவட்ட பா.ம.க. மற்றும் வன்னியர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.
பொதுக்குழு கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-
அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயர் வரக்கூடாது. தேவை என்றால் அன்புமணி எனது பெயரை இனிசியலாக பயன்படுத்திக் கொள்ளலாம். என் பேச்சைக் கேட்கவில்லை என்றால் என் பெயரை யாரும் பயன்படுத்தக்கூடாது. தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை; தசரதன் ஆணையை ஏற்று ராமர் வனவாசம் சென்றார். ஐந்து வயது குழந்தை போல் நான் செயல்படுவதாக சில கூறி வருகின்றனர். ஐந்து வயது குழந்தையான நான் தான் 3 வருடங்களுக்கு முன் அன்புமணியை பாமக தலைவராக்கியவன். இவ்வாறு அவர் கூறினார்.