சென்னை,
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை நேற்று சந்தித்த நடிகரும் த.வெ.க தலைவருமான விஜய் அவர்கள் முன் பேசுகையில், "டங்க்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக தமிழக அரசு கொண்டுவந்த தீர்மானத்தை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். ஆனால், அதே நிலைப்பாட்டை தானே பரந்தூர் பிரச்சினையிலும் எடுத்திருக்க வேண்டும். அரிட்டாபட்டி மக்கள் எப்படியோ, அப்படி தானே பரந்தூர் மக்களும். அப்படி தானே அரசாங்கம் யோசிக்க வேண்டும். ஆனால் அரசு அப்படி செய்யவில்லை. ஏன் செய்யவில்லை. ஏனென்றால், விமான நிலையத்தையும் தாண்டி இந்த திட்டத்தில் அவர்களுக்கு ஏதோ ஒரு லாபம் இருக்கிறது. அது மக்கள் தெளிவாக புரிந்து வைத்துள்ளார்கள்" என்று விஜய் குற்றம்சாட்டி இருந்தார்.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேற்று மக்களை சந்தித்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, "அன்னா ஹசாரே போன்று ஓராண்டு உண்ணாவிரதம் இருந்தாரா விஜய்..?, நேற்றையை நிகழ்வு நேற்றோடு எல்லாம் முடிவடைந்து விட்டது. மக்கள் பணியை நாங்கள் சூரியன் உதிக்கும் முன்னர் ஆரம்பித்துள்ளோம். நடு இரவில்தான் மக்கள் பணி முடிந்து வீடு திரும்புவோம். இது திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலை" என்று அவர் தெரிவித்தார்.
மற்றொரு செய்தியாளர்கள் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "எடப்பாடி பழனிசாமி ஏற்கெனவே அதிரடிப்படை அமாவாசையாக மாறியவர்தான்.. அதனால் அமாவாசையைதான் கணக்கு போட்டு கொண்டிருப்பார். எங்கள் தலைவர், எங்கள் முதல்-அமைச்சர் தமிழக மக்களின் நலனை கருத்தில்கொண்டு ஆட்சி நடத்துபவர். முதல்-அமைச்சரின் அரும்பெரும் திட்டங்களால் 24*7 என்ற அடிப்படையில் செய்யப்படும் மக்கள் பணியால் 25 ஆண்டு காலம் இந்த திராவிட மண்ணிலே தமிழகத்தின் முதல்-அமைச்சர் பதவியை எங்கள் முதல்வர் தான் அலங்கரிப்பார்" என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.