அனைவரையும் அன்பால் ஒருங்கிணைக்க நினைத்தவர் போப் பிரான்சிஸ்: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்

4 hours ago 3

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை, லயோலா கல்லூரியில், தமிழக துறவியர் பேரவை மற்றும் இயேசு சபை சென்னை மறைமாநிலம் இணைந்து நடத்திய திருத்தந்தை போப் பிரான்சிஸ் நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, போப் பிரான்சிஸ் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறியதாவது:-

கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்தாலும், கிறிஸ்தவ மத நம்பிக்கையாளர்களால் மட்டுமல்ல அனைவராலும் போற்றி மதிக்கத்தக்க மாமனிதராக திகழ்ந்தவர் போப் ஆண்டவர் பிரான்சிஸ். அன்பு, அமைதி, இரக்கம், எளிமை ஆகியவற்றின் அடையாளமாக போப் பிரான்சிஸ் திகழ்ந்தார். உலக அமைதி, மனித நேயம், மனித உரிமைகள், சுற்றுச்சூழல் ஆகியவை குறித்து அக்கறை உள்ளவராகவும் அவர் இருந்தார். முற்போக்குக் கொள்கைகளோடு கத்தோலிக்கத் திருச்சபையை வழிநடத்தி, பெரும் மாற்றங்களை முன்னெடுத்தவர் திருத்தந்தை போப் பிரான்சிஸ்.

அணு ஆயுதங்களுக்கு எதிராக குரல் கொடுத்தவர். புறக்கணிக்கப்பட்டவர்களுக்கான அரவணைப்பையும் நீதியையும் வழங்குவதற்கு, அவரே முன் உதாரணமாக இருந்திருக்கிறார். 2015-ம் ஆண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆவணத்தை போப் பிரான்சிஸ் வெளியிட்டார். பூமி மற்றும் அதன் வளங்களை காப்பாற்ற வேண்டியது மதக் கடமை என்றும், இயற்கையை அழிப்பது மனிதர்களுக்கு எதிரான பாவம் என்றும் அதில் குறிப்பிட்டார். சமயத்தின் வழியே இயற்கைப் பாதுகாப்பை வலியுறுத்திய மாபெரும் செயலைச் செய்தவர் போப் பிரான்சிஸ்.

மதங்களைக் கடந்த தன்மை, அனைத்து மதங்களையும் ஒன்றாகக் கருதும் தன்மை அவருக்கு இருந்தது. மதங்களுக்கு இடையிலான உரையாடலுக்கான அவரது முன்னெடுப்புகள் கத்தோலிக்க உலகத்தைத் தாண்டியும் அவருக்கு பெரும் மரியாதையை பெற்றுத் தந்தது. பல்வேறு மதத் தலைவர்களைச் சந்தித்தார். அதை தனது வழக்கமாகவே வைத்துக்கொண்டார். ஒரு சில நாடுகளில் இரு மதத்தினருக்கு இடையில் பிரச்சினைகள் ஏற்பட்டபோது, அதை அவர் சமாதானம் செய்திருக்கிறார். இஸ்லாமிய நாடுகளுக்கு பயணம் செய்ததன் மூலமாக அனைவரையும் அன்பால் ஒருங்கிணைக்க நினைத்தார். அன்புதான் மதங்களின் அடையாளமாக மாறவேண்டும் என்று கருதினார்.

அடுத்த ஆண்டு அவர் இந்தியாவுக்கு வர இருந்த நிலையில் மறைந்தது கூடுதல் வருத்தமாக நமக்கெல்லாம் அமைந்திருக்கிறது. அன்பின் அடையாளமாக, அமைதியின் அடையாளமாக போப் பிரான்சிஸ் அவர்களின் புகழ் நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்கும். வன்முறைக்கும், வெறுப்புணர்வுக்கும், போர்களுக்கும் எதிரான அவரது குரல் என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும். அவர் விரும்பிய அமைதி உலகம் உருவாகட்டும்! அன்பே எங்கும் நிறையட்டும்! இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article