நாகை : தொகுதி சீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டின் உரிமையை பறிக்க முயற்சி நடப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். நாகை மாவட்டத்திற்கு சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு 105 புதிய அரசு பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்தார். நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கும்பகோணம், காரைக்குடி, திருச்சி, கரூர் மண்டலங்களில் 105 புதிய அரசு பேருந்துகளை முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து, நாகப்பட்டினம் மாவட்ட திமுக செயலாளர் என்.கௌதமன் இல்லத்திருமண விழாவை நடத்தி வைத்தார். மகிபாலன்-உமா மகேஸ்வரி ஆகியோரது திருமணத்தை
நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தொடர்ந்து, இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையில், “தமிழக எம்.பி.க்களின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் தொகுதி மறுசீரமைப்பு என்று பாஜக சதி செய்கிறது. வரும் 5-ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்துக்கு பெரும்பாலான கட்சிகள் வருவதாக கூறியுள்ளனர். ஆனால் சிலர், இவன் என்ன அழைப்பது, நாம் என்ன போவது என்று இதில் கௌரவம் பார்க்காதீர்கள். தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு வரமுடியாது என்று சொன்னவர்கள் தயவுகூர்ந்து வரவேண்டும் என அழைப்பு விடுக்கிறேன். தமிழ்நாட்டு நலனை கருத்தில் கொண்டு அனைத்துக்கட்சி கூட்டத்தில் 40 கட்சி தலைவர்களும் பங்கேற்க வேண்டும். தமிழ்நாட்டு உரிமைக்காக நடக்கும் அனைத்துக்கட்சி கூட்டத்தை அரசியலாக பார்க்கவேண்டாம். இது நம்முடைய உரிமை,”இவ்வாறு தெரிவித்தார்.
The post அனைத்துக்கட்சி கூட்டத்தில் கவுரவம் பார்க்காதீர், கண்டிப்பாக கலந்து கொள்ளுங்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் அழைப்பு appeared first on Dinakaran.