அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

1 month ago 11

சென்னை, அக்.5: அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, அனைத்து மண்டலங்களிலும் கொசு ஒழிப்பு பணிக்காக ₹67 லட்சம் மதிப்பில் கூடுதலாக கையினால் இயக்கும் 100 புகை பரப்பும் இயந்திரங்களை களப் பணியாளர்களுக்கு வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னையில் 792 கி.மீ. நீளத்திற்கு வடிகால்களை தூர்வாரும் பணி நடந்து முடிந்துள்ளது. 1152 கி.மீ. நீள பணிகள் வரும் 10ம் தேதிக்குள் முடிவடைந்து விடும். 53.48 கி.மீ. நீளமுள்ள 33 கால்வாய்களில் 12 இயந்திரங்கள் மூலம் ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணிகள் நடந்து வருகிறது. 73,180 கசடு அகற்றும் குப்பிகள் மூலம் தூர்வாரப்பட்டு வருகின்றன. 784.96 கி.மீ. நீளத்திற்கு புதிதாக மழைநீர் வடிகால்கள் 2021ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை கட்டப்பட்டுள்ளது. 350 கி.மீ. நீளத்திற்கு மேலும் கொசஸ்தலை ஆறு, கோவளம் பணிகள் நடந்து வருகிறது.

மழைக்காலம் வந்த காரணத்தால் வடகிழக்கு பருவமழை முடியும் வரை அவசரப் பணிகள் தவிர சாலை வெட்டும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழை நீரை வெளியேற்ற பல்வேறு திறன் கொண்ட 990 மோட்டார் பம்புகள் தயாராக உள்ளன. இதில், அதிக திறன் கொண்ட 100 பம்புகள் புதிதாக வாங்கப்பட்டவை. விழுந்த மரங்கள் மற்றும் மரக்கிளைகளை அகற்ற 280 மரம் அறுக்கும் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. 162 எண்ணிக்கையிலான நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 16 சுரங்கப்பாதைகள் மற்றும் நெடுஞ்சாலை துறையின் கீழ் 6 சுரங்கப்பாதைகள் உள்ள நிலையில் அவற்றில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற மோட்டார் பம்புகள் மற்றும் ஜெனரேட்டர்கள் தயார் நிலையில் உள்ளன. சென்னை மாநகராட்சியில் உள்ள 300 சுகாதார மையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் மழைக்காலத்திற்கு தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளன. மழைக்காலங்களில் கூடுதலாக மருத்துவ முகாம்கள் நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 13 சென்டி மீட்டர் மழை பெய்த இடத்தை கூட, எதனால் அங்கு மணிக்கணக்கில் தண்ணீர் தேங்குகிறது என கவனித்து அங்கு தேவையான பணிகள் நடந்து வருகின்றன.

ஆகஸ்ட் 24ம் தேதி கொசஸ்தலை ஆறு பணி முடிந்திருக்க வேண்டும். அந்த பணிகளை நீர்வளத்துறை செய்து வருகிறது. அந்த பணிகள் முடிந்ததும் நீரைக் கொண்டு சேர்க்கும் பணியை சரியாக செய்து வருகிறோம். மழை வந்து நீர் தேங்கினால் ஏன் படகுகள் தயார் நிலையில் இல்லை என்று கேட்கிறீர்கள். முன்கூட்டியே எச்சரிக்கையுடன் படகுகளை தயார் செய்து வைத்தால், அப்படி என்றால் நீர் தேங்குமா என்று கேட்கிறீர்கள். அனைத்து வகைகளிலும் தயார் நிலையில் உள்ளது. வானிலை ஆய்வு மையம் கணித்துள்ள சராசரி மழை அளவுக்கு ஏற்ற வகையில் அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்சியில், சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்
சிந்தாதிரிப்பேட்டை மற்றும் கோபாலபுரத்தில் உள்ள பொது சமையல் கூடங்களில் மணிக்கு 1500 பேருக்கு உணவு பொட்டலங்கள் தயார் செய்யும் வகையில் தயார் நிலையில் உள்ளது. ஒவ்வொரு வார்டுகளிலும் புயல் மற்றும் மழைநீர் அகற்றும் அவசர பணிகளுக்கு 5 பேர் தற்காலிகமாக பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். பொதுமக்களிடமிருந்து மழை தொடர்பான புகார்களை பெற்று உடனடி நடவடிக்கை எடுக்கும் வகையில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. 15 மண்டலங்களுக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொசு ஒழிப்புக்கு 3,368 பணியாளர்கள்
கொசுக்களால் பரவும் நோய்த்தெடுப்பு பணிக்காக நிரந்தரம் மற்றும் தற்காலிக பணியாளர்கள் என 3,368 களப்பணியார்கள் பணிபுரிந்து வருகின்றனர். கொசுக்களை கட்டுப்படுத்த 319 மருந்து தெளிப்பான்கள் 54 பவர் ஸ்பிரேயர்கள், பேட்டரி மூலம் இயங்கும் 156 ஸ்பிரேயர்கள், 324 புகைப்பரப்பும் இயந்திரங்கள் வாகனங்களில் பொருத்தப்பட்ட 64 புகைப்பரப்பும் இயந்திரங்கள், 6 டிரோன் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஓட்டேரி கால்வாய் பணிகள் எல்லாம் விரைவில் முடிக்க நீர்வளத் துறைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அந்த பணிகள் விரைவாக நடந்து வருகின்றன. நெடுஞ்சாலைத்துறை, மின்சாரத்துறை, நீர்வளத்துறை என அனைத்து துறைகளையும் வைத்து முதல்வர் மழைக்காலத்திற்குள் அனைத்து பணிகளையும் முடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

The post அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article