அனைத்து வகை மருந்துகளுக்கும் 25% தள்ளுபடி மாவட்டத்தில் 27 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள்

3 hours ago 1

*காணொளியில் முதல்வர் திறந்து வைத்தார்

*பொதுமக்கள் பயன்பெற கலெக்டர் அழைப்பு

ராசிபுரம் : நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 27 இடங்களில் ‘முதல்வர் மருந்தகங்கள்’ திறக்கப்பட்டுள்ளது. இவற்றில் 25 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் மருந்துகள் பெற்று, பொதுமக்கள் பயனடையலாம் என ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேத்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில் நேற்று கூட்டுறவுத் துறை சார்பில், தமிழ்நாடு முழுவதுமாக 1000 ‘முதல்வர் மருந்தகங்களை’ காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

இதன் ஒரு பகுதியாக, நாமக்கல் மாவட்டத்தில் 17 கூட்டுறவு சங்கங்களின் மருந்தகங்கள், 10 தனிநபர் மருந்தகங்கள் என மொத்தம் 27 முதல்வர் மருந்தகங்களை திறந்து வைத்துள்ளார். ராசிபுரம் வட்டம், மங்களபுரம், திம்மநாயக்கன்பட்டி, அத்தனூர், ஆயிபாளையம் மற்றும் பிள்ளாநல்லூர் ஆகிய இடங்களில் திறக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகங்களில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், கலெக்டர் உமா ஆகியோர் முதல் விற்பனையை தொடங்கி வைத்தனர். பின்னர் அமைச்சர் மதிவேந்தன் பேசியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர், குறைந்த விலையில் (ஜெனரிக்) மருந்து, மாத்திரைகளையும், பிற மருந்துகளையும் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் 1,000 முதல்வர் மருந்தகங்களை திறந்து வைத்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில், 27 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இம்மருந்தகங்கள் வாயிலாக தரமான மருந்துகள், குறைந்த விலையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளது. ஏழை, எளிய மக்கள், முதியோர்கள், சர்க்கரை, ரத்த அழுத்த நோயாளிகள், தங்களுக்கு தேவையான மருந்துகளை வாங்க சுமார் ரூ.500 முதல் ரூ.1000 வரை செலவு செய்கின்றனர்.

முதல்வர் மருந்தகங்கள் மூலம், 25 சதவீதம் தள்ளுபடி விலையில் சேவை மனப்பான்மையோடு மருந்துகள் விற்பனை செய்யப்படும். பொதுமக்கள் முதல்வர் மருந்தகங்களை முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இத்திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில் முனைவோர்கள் மருந்தாளுநர்களுக்கு ₹3 லட்சம் அரசு மானியம் வழங்கப்படுகிறது. கூட்டுறவு அமைப்புகள் மூலம், முதல்வர் மருந்தகங்கள் செயல்படுத்தப்படும் நேர்வில் அரசு மானிய தொகை ரூ.2 லட்சம் வழங்கப்படுகிறது.

அதில் 50 சதவீதம் உட்கட்டமைப்பு வசதிக்கும், 50 சதவீதம் மருந்துகளாகவும் வழங்கப்படுகிறது. நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம், நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட உள்ள முதல்வர் மருந்தகத்திற்கான மருந்துகள் சேமிக்கும் கிடங்காக செயல்படுகிறது. இக்கிடங்கில் இருந்து மருந்தகத்திற்கான மருந்துகள் வழங்கப்படும்.

மாவட்ட கிடங்கில் இருந்து முதல்வர் மருந்தகங்களுக்கு மருந்துகளை அனுப்ப, தனியாக ஒரு வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மருந்தக கிடங்கிற்கு ஜெனரிக் மருந்துகள் தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் மூலமும், இதர மருந்துகள், மருத்துவ பொருட்கள் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, முதல்வர் மருந்தகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் முதல்வர் மருந்தக உட்கட்டமைப்பு வசதிகளுக்காக 17 கூட்டுறவு சங்கங்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.17 லட்சமும், 10 தொழில் முனைவோர்களுக்கு தலா ரூ.1.50 லட்சம் வீதம் ரூ.15.00 லட்சமும் என மொத்தம் ரூ.32 லட்சம் மானிய தொகை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து அமைச்சர் மதிவேந்தன், மங்களபுரத்தில் முதல்வர் மருந்தகத்தில் முதல் விற்பனையை தொடங்கி வைத்து, 5 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.30 லட்சம் மதிப்பில் கடனுதவி, 24 விவசாயிகளுக்கு ரூ.29.23 லட்சம் மதிப்பில் பயிர்க்கடன் என 29 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.59.23 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மேலும், ஆயில்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க மரச்செக்கு கடலை எண்ணெய் உற்பத்தி ஆலையை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், முன்னாள் எம்எல்ஏ ராமசுவாமி, இணைபதிவாளர், கூட்டுறவு சங்கங்கள் அருளரசு, அந்தந்த பகுதி அட்மா குழு தலைவர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அதே போல், சேந்தமங்கலம், காளப்பநாயக்கன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் சார்பில் ராசிபுரம் மெயின் ரோடு, புதன்சந்தை மெயின் ரோடு ஜங்களாபுரம் ஆகிய இடங்களில், முதல்வர் மருந்தகங்களை பொன்னுசாமி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், வட்டார ஆத்மா குழு தலைவர் அசோக்குமார், கூட்டுறவு துணைப்பதிவாளர் நாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.புதுச்சத்திரம் ஒன்றியம், செல்லப்பம்பட்டி தொடக்க வேளா ண்மை கூட்டுறவு வங்கியின் சார்பில் முதல்வர் மருந் தகம் திறப்பு விழா பொம்மைக்குட்டை மேட்டில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு கூட்டுறவு துணை பதிவாளர் நாகராஜன் தலைமை வகித்தார். விழாவில், நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் கலந்து கொண்டு மருந்தகத்தை திறந்து வைத்து விற்பனையை தொடங்கி வைத்தார்.

திருச்செங்கோடு: திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம் சார்பில், புதிய பஸ் நிலைய வணிக வளாகத்தில், முதல்வர் மருந்தகம் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு டிசிஎம்எஸ் மேலாண் இயக்குனர் யசோதாதேவி தலைமை வகித்தார்.

நாமக்கல் மாதேஸ்வரன் எம்.பி., மருந்தகத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் நடேசன், நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு, துணைத்தலைவர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

எலச்சிபாளையம் கூட்டுறவு தொடக்க வேளாண்மை கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ள மருந்தகத்தை கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும், அட்மா குழு தலைவருமான தங்கவேல் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் செயலாட்சியர் மகேஸ்வரன், பணியாளர்கள் பிரேமா, ராமசாமி, கவிதர்ஷினி, சக்திவேல், செல்லமுத்து, துரைசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post அனைத்து வகை மருந்துகளுக்கும் 25% தள்ளுபடி மாவட்டத்தில் 27 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் appeared first on Dinakaran.

Read Entire Article