
சென்னையில் மின்சார ரெயில்களில் பயணிகளின் வசதிக்காக கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தது. அந்த வகையில், தற்போது, சென்னை கோட்டத்தில் 9 பெட்டிகளுடன் இயக்கப்படும் அனைத்து மின்சார ரெயில்களும் இனி 12 பெட்டிகளுடன் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, வெளியிடப்பட்டிருந்த செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தெற்கு ரெயில்வே சென்னை கோட்டத்தில் தினமும் 12 லட்சம் பயணிகள் ரெயிலில் பயணம் செய்து வருகின்றனர். இதில் சுமார் 8 லட்சத்து 60 ஆயிரம் பேர் புறநகர் மின்சார ரெயில் சேவையை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக, சென்னை கடற்கரை-செங்கல்பட்டு, சென்னை சென்டிரல்-அரக்கோணம், சென்னை சென்டிரல்-கும்மிடிப்பூண்டி, சென்னை சென்டிரல்-சூலூர்பேட்டை உள்ளிட்ட வழித்தடங்களில் நாளுக்கு நாள் பயணிகளின் கூட்டம் அதிகரித்து கொண்டே செல்கிறது.
இதனால் பயணிகளின் வசதிக்காக, மின்சார ரெயில்களின் பெட்டிகளை அதிகரிக்க முடிவு செய்தோம். அதன்படி, தற்போது, 9 பெட்டிகள் கொண்ட புறநகர் மின்சார ரெயில்கள் அனைத்தும் 12 பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளது. இதன்மூலம், 4 லட்சம் கூடுதல் பயணிகளுக்கு ரெயிலில் இடவசதி கிடைக்கும் (21சதவீதம் கூடுதல் பயணிகள் பயணிக்க முடியும்). இதனால் கூட்ட நெரிசல் மிக்க நேரங்களில் நெரிசல் குறைவதோடு பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்தை பயணிகள் மேற்கொள்ள முடியும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.