அனைத்து சிறுபான்மையினரையும் வங்கதேச அரசு பாதுகாக்க வேண்டும்: இந்தியா வலியுறுத்தல்

2 hours ago 1

புதுடெல்லி: வங்கதேசத்தில் உள்ள இடைக்கால அரசு அனைத்து சிறுபான்மையினரையும் பாதுகாக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி இருக்கிறது. வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான அட்டூழியங்கள் அதிகரித்துள்ளது. சிறுபான்மையினர் குறிவைத்து தாக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய வெளியுறவு துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், ‘‘இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினருக்கு எதிரான அச்சுறுத்தல்கள், குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து வங்கதேச இடைக்கால அரசிடம் இந்தியா தொடர்ந்து வலுவாக குரல் எழுப்பி வருகின்றது.

இந்த விவகாரத்தில் எங்கள் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. இடைக்கால அரசு அனைத்து சிறுபான்மையினரையும் பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் தீவிரவாத பேச்சுக்களின் எழுச்சி, அதிகரித்து வரும் வன்முறை மற்றும் ஆத்திரமூட்டல் சம்பவங்கள் குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம். இந்த முன்னேற்றங்களை ஊடகங்கள் மிகைப்படுத்தியதாக கூறி ஒதுக்கிவிட முடியாது. சிறுபான்மையினர் பாதுகாப்பிற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு வங்கதேசத்துக்கு மீண்டும் அழைப்பு விடுக்கிறோம்” என்றார்.

* 17பேரின் வங்கி கணக்குகள் முடக்கம்
வங்கதேசத்தில் தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் இஸ்கான் முன்னாள் உறுப்பினர் சின்மோய் கிருஷ்ணதாஸ் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கைது செய்யப்பட்ட சின்மோய் உட்பட 17 பேரின் வங்கி கணக்குகளை முடக்குவதற்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வங்கதேசத்தின் நிதி புலனாய்வு பிரிவு நேற்று முன்தினம் இந்த உத்தரவை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ளது. சம்பந்தப்பட்டவர்களின் அனைத்து வகையான பரிவர்த்தனைகளும் ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

The post அனைத்து சிறுபான்மையினரையும் வங்கதேச அரசு பாதுகாக்க வேண்டும்: இந்தியா வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article