அனைத்திந்திய கூட்டுறவு வார விழா 841 நியாய விலை கடைகள் மூலம் 4.44 லட்சம் அட்டைதாரர்களுக்கு உணவு பொருட்கள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு

1 month ago 5

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் 841 நியாய விலைக் கடைகள் மூலம் 4.44 லட்சம் அட்டைதாரர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது என அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசினார். செங்கல்பட்டு மாவட்டம், அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் 71வது மாவட்ட அளவிலான அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. இதில் சிறந்த கூட்டுறவு நிறுவனங்களுக்கு பாராட்டுக் கேடயங்கள் மற்றும் 1,678 பயனாளிகளுக்கு ரூ.35.71 கோடி மதிப்பீட்டில் கடன் உதவிகள், சிறந்த கூட்டுறவு நிறுவனங்களுக்கு பாராட்டுக் கேடயங்கள் மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் முன்னிலையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று வழங்கினார்.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில்: தமிழகத்தில் கூட்டுறவு துறையில் 23 ஆயிரத்து 221 பதிவு செய்யப்பட்ட சங்கங்களில், 2 கோடியே 23 லட்சத்து 45 ஆயிரத்து 347 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் 611 பதிவு செய்யப்பட்ட சங்கங்களில் 4 லட்சத்து 22 ஆயிரத்து 216 பேர் உறுப்பினராக உள்ளனர். தமிழ்நாட்டில் 33 ஆயிரத்து 760 நியாய விலைக் கடைகள் மூலம் 2 கோடியே 14 லட்சத்து 67 ஆயிரத்து 500 குடும்ப அட்டைகளுக்கு உணவுப்பொருட்கள் வழங்கப்படுகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 841 நியாய விலைக் கடைகள் மூலம் 4 லட்சத்து 44 ஆயிரத்து 406 குடும்ப அட்டைகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. செங்கல்பட்டு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 1,109 மகளிர் சுய உதவிக் குழுக்கள் வாங்கிய ரூ.29 கோடியே 41 லட்சம் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு 12,486 மகளிர் பயனடைந்துள்ளனர். கூட்டுறவு வங்கிகளில் தமிழகம் முழுவதும் 16,43,347 விவசாயிகளுக்கு ரூ.12,489 கோடி மதிப்பிலான பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 17,227 விவசாயிகள் வாங்கிய ரூ. 123 கோடியே 24 லட்சம் பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அரசின் திட்டங்களை கூட்டுறவு துறையில் பங்கு மிகவும் முக்கியமானது. ஒரு அரசாங்கத்திற்கு நல்ல பெயர் கிடைப்பதும், அவப்பெயர் கிடைப்பதும், கூட்டுறவுத்துறையின் பொருத்தே அமையும். கூட்டுறவுத்துறை பொதுமக்களுடன் நேரடி தொடர்புடைய துறையாக உள்ள அலுவலர்கள் மிகுந்த கவனத்துடன் அரசுக்கு நல்ல பெயரை வழங்க வேண்டும் என இந்த விழாவின் வாயிலாக கேட்டுக்கொள்கிறேன்.

முதலமைச்சர் தலைமையிலான தமிழக அரசு மூன்றரை ஆண்டுகளில் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 750 புதிய மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டு, ரூ.92 ஆயிரம் கோடி கடன் உதவிகள் வழங்கப்பட்டு 14 லட்சத்து 91 ஆயிரத்து 985 மகளிர் பயனடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது என பேசினார். மேலும், கூட்டுறவில் சமூக பொருளாதார மேம்பாட்டில் கூட்டுறவின் பங்கு என்ற தலைப்பில் செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவியருக்கு நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி மற்றும் ஓவியப்போட்டி, பரதநாட்டியம் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, மாவட்ட வழங்கல் அலுவலர் சாகிதா பர்வீன், காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி கூடுதல் பதிவாளர் மேலாண்மை இயக்குநர் சிவமலர், இணைப்பதிவாளர் நந்தகுமார், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் து.செம்பருத்தி துர்கேஷ், மறைமலைநகர் நகர்மன்றத் தலைவர் தேன்மொழி நரேந்திரன், சண்முகம், செங்கல்பட்டு நகர்மன்றத் தலைவர் தேன்மொழி நரேந்திரன். உறுப்பினர் சங்கமித்ரா கருணாகரன், மேலமையூர் ஊராட்சி மன்றத் தலைவர் ஹெலன் சிந்தியா சரவணன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கூட்டுறவாளர்கள், அரசு உயர் அலுவலர்கள், கூட்டுறவு துறை அலுவலர்கள், சங்கப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post அனைத்திந்திய கூட்டுறவு வார விழா 841 நியாய விலை கடைகள் மூலம் 4.44 லட்சம் அட்டைதாரர்களுக்கு உணவு பொருட்கள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு appeared first on Dinakaran.

Read Entire Article