
சென்னை,
டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழலை கண்டித்து சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என தமிழக பா.ஜனதா அறிவித்தது.
பா.ஜனதாவின் இந்த போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து நேற்று எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம், டாஸ்மாக் தலைமை அலுவலகம் அமைந்துள்ள தாளமுத்து நடராசன் மாளிகை, பாந்தியன் சாலை, சிந்தாதிரிப்பேட்டை, புதுப்பேட்டை ஆகிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டனர். டாஸ்மாக் தலைமை அலுவலகம் நுழைவு வாயிலில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். டாஸ்மாக் அலுவலகத்திற்கு உள்ளே செல்லும் வாகனங்கள் பலத்த சோதனைக்கு பின்பே அனுமதிக்கப்பட்டது.
இதனிடையே டாஸ்மாக் தலைமை அலுவலக முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பா.ஜ.க. நிர்வாகிகள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். இதன்படி சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் இருந்து போராட்டம் நடத்த வெளியே வந்த தமிழிசை சவுந்தரராஜனை போலீசார் கைது செய்தனர்.
இதேபோன்று எழும்பூரில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட வந்த பா.ஜ.க. மூத்த தலைவர் ஹெச்.ராஜா, முன்னாள் மத்திய இணைமந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், கரு.நாகராஜன், அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.
தலைமைச் செயலகத்தில் இருந்து போராட்டம் நடக்கும் பகுதிக்கு சென்ற பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் வானதி சீனிவாசன், சரஸ்வதி ஆகியோரும் கைதுசெய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். டாஸ்மாக் முறைகேட்டைக் கண்டித்து தலைமைச் செயலகம் முன்பும் பா.ஜ.க.-வினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, சென்னையில் தடையை மீறி போராட்டம் நடத்தியதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உள்பட 100 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதன்படி நீலாங்கரை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் அனுமதி இன்றி போராட்டம் நடத்த முயன்ற தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட 86 பேர் மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பொன். ராதாகிருஷ்ணன், ஹெச். ராஜா, கரு.நாகராஜன், வினோஜ் பி செல்வம் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.