
பெங்களூரு,
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனில் படுமோசமாக விளையாடி வருகிறது. தொடக்க லீக்கில் மும்பையையும், 7-வது லீக்கில் லக்னோவையும் வீழ்த்தினார்கள். மற்ற அனைத்திலும் தோல்வி மயம்தான். அதுவும் உள்ளூரில் தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் தோற்றது பெரும் பின்னடைவை ஏற்படுத்தி விட்டது.
2 வெற்றி, 8 தோல்வி என புள்ளி பட்டியலில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ள சென்னை அணி 'பிளே-ஆப்' வாய்ப்பையும் பறிகொடுத்து விட்டது. ஆனால் இனி இழப்பதற்கு எதுவுமில்லை என்ற மனநிலையில் நெருக்கடியின்றி ஆடுவார்கள். முடிந்தவரை புள்ளிபட்டியலில் ஓரிரு இடங்கள் முன்னேற முயற்சிப்பார்கள். இத்தகைய சூழலில் சென்னை அணி இன்று நடைபெற உள்ள லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணியுடன் மோத உள்ளது.
இந்நிலையில் சிஎஸ்கே அணியிடம் இப்போதும் எதிரணிகளுக்கு சவால் கொடுத்து வெற்றி பெறும் திறமை இருப்பதாக பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்சி தெரிவித்துள்ளார். மேலும் ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப் ஆகிய 3 அணிகளுக்கு எதிராக நெருக்கமாக சென்று வெற்றியை தவற விட்டதாக ஹஸ்சி கூறியுள்ளார். ஒருவேளை அந்த 3 போட்டிகளிலும் வென்றிருந்தால் இந்நேரம் சென்னை 10 புள்ளிகளுடன் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பைக் கொண்டிருக்கும் என்று ஹஸ்சி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "இந்த சீசன் எங்களுக்கு நன்றாக அமையவில்லை என்பதற்காக நாங்கள் பதற்றமடைந்து அனைத்தையும் தூக்கி எறியப்போவதில்லை. ஆனால் நாங்கள் இன்னும் சில இடங்களில் நேர்த்தியாக செயல்பட வேண்டும். நாங்கள் நிறைய போட்டிகளை வெல்லாமல் புள்ளிப்பட்டியலில் கீழே இருக்கிறோம் என்பது எனக்குத் தெரியும்.
ஆனால் வெற்றிக்கு அதிக தொலைவில் இருக்கிறோம் என்று நான் நினைக்கவில்லை. எங்களுடைய அணியில் சில மேட்ச் வின்னர்கள் இருக்கின்றனர். எனவே எந்த அணியுடனும் கண்டிப்பாக எங்களால் போட்டியிட முடியும். அந்த 3 போட்டிகளை பற்றி எனது மனம் சிந்தித்துக் கொண்டிருக்கிறது. அதில் வெற்றி பெற்றிருந்தால் கண்டிப்பாக நாங்கள் டாப் 4 இடத்திற்கு நெருக்கமாக இருந்திருப்போம்.
இருப்பினும் அதைத் தவற விட்ட எங்களுக்கு புதிய வீரர்களுக்கு வாய்ப்பை கொடுக்க இடம் கிடைத்துள்ளது. அவர்கள் தங்கள் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு அடுத்த சில ஆண்டுகளுக்கு அணியில் தங்கள் இடத்தைப் பிடித்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். நல்ல வீரர்கள் எங்களுக்கு கிடைத்தால் அதுவே இந்த ஐ.பி.எல். சீசனின் அருமையான முடிவாக இருக்கும்" என்று கூறினார்.