சுரேஷ்குமாரின் சொந்த ஊர் அத்திவாக்கம். அவரது ஊரின் பெயராலோ என்னவோ, அத்தி சாகுபடியில் இறங்கி அட்டகாசமான லாபம் பார்த்து வருகிறார். சென்னையை ஒட்டிய செங்கல்பட்டு மாவட்டத்தில் தான் இப்படி ஒரு லாபகரமான விவசாயம் நடந்து வருகிறது. ஒரு காலைப்பொழுதில் தனது அத்தி வயலில் கவாத்துப் பணி மேற்கொண்டிருந்த சுரேஷ்குமாரைச் சந்தித்தோம். “மற்ற ஊர்களைப் போலவே எங்கள் ஊரிலும் நெல்தான் பிரதான பயிர். நானும் அதைத்தான் வழக்கமாக பயிரிட்டு வந்தேன். கடந்த 7 வருடத்திற்கு முன்பு ஒரு புதிய பயிரை சாகுபடி செய்யலாமே என தோன்றியது. அப்போது அத்தி குறித்து கேள்விப்பட்டேன். உடனே நான் அத்திப்பழ சாகுபடியில் இறங்கிவிடவில்லை. கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் அத்தி விவசாயம் தொடர்பான தேடலில் ஈடுபட்டேன். புனேவில் இரண்டு வருடம் தங்கி அத்தி சாகுபடி குறித்து பல்வேறு தகவல்களைத் தெரிந்துகொண்டேன். அதன்பிறகே முழுமையாக சாகுபடியில் இறங்கினேன்.எனக்குச் சொந்தமான 8.5 ஏக்கர் நிலத்தில் இப்போது அத்திப்பழ சாகுபடி நடக்கிறது. பல இடங்களுக்கு சென்று அத்திப்பழம் பற்றி அறிந்து கொண்டதில் தாய் மரத்தின் வயதை பொருத்துதான் மகசூல் இருக்கும் என்பது தெரியவந்தது. தற்போது என்னுடைய நிலத்தில் இருக்கும் செடிகளின் தாய்ச்செடிகள் கிட்டதட்ட பதினைந்து வருடம் வயதுடையவை. முதன்முதலில் எனக்கு தேவையான அத்திக் கன்றுகளை புனேவில் இருந்து ரூ.130க்கு வாங்கி வந்தேன். பொதுவாக ஒரு ஏக்கருக்கு 890 அத்திக்கன்றுகள் வைத்து வளர்க்கலாம். ஆனால் நான் ஒரு ஏக்கருக்கு 850 கன்றுகள் மட்டுமே வைத்து வளர்த்து வருகிறேன்.
ஒவ்வொரு கன்றுக்கும் 50 சதுரடி நிலம் ஒதுக்கி இருக்கிறேன். கன்றுகளை நடவு செய்வதற்கு முன்பு 3 முறை உழவு ஓட்டினேன். அதன்பிறகு 1 அடி நீளம், 1.5 அடி அகலம் அளவுள்ள குழி எடுத்து அத்திக்கன்றுகளை நடவு செய்தேன். நான் நடவு செய்த கன்றுகள் ஒவ்வொன்றும் 3 மாத வயதுடையவை. கன்றுகளை குழிகளுக்குள் ஊன்றுவதற்கு முன்பு 2 கிலோ எருவுரம் போட்டேன். இதோடு மேல்மண், வேப்பம்புண்ணாக்கு, சூடோமோனஸ் உள்ளிட்டவற்றையும் கலந்து போட்டேன். அதன்பிறகு உயிர்த்தண்ணீர் கொடுத்தேன். அத்தியைப் பொருத்தவரை மூன்று ரகங்கள் மிகவும் பிரபலம். பூனேரெட், டர்க்கி பிரவுன், டையானா என்பதுதான் அது. நான் பூனேரெட்டை நடவு செய்திருக்கிறேன். இதை நான் தேர்வு செய்தற்கு காரணம் அதிக விளைச்சல் கொடுக்கும் என்பதுதான். மற்ற இரண்டும் குறைவான விளைச்சலே கொடுக்கும்.
என்னுடைய நிலத்தில் தண்ணீர் வசதி குறைவு. அதனால் ஒவ்வொரு கன்றுக்கும் சொட்டுநீர் பாசனம் மூலமே தண்ணீர் கொடுத்து வருகிறேன். இதற்கு 8 எம்எம் அளவிலேயே பைப் பயன்படுத்தி வருகிறேன். மாதம் ஒருமுறை கன்றுகளுக்கு இடையில் வளரும் களைகளை கொத்தி எடுத்துவிடுவேன். அப்போதுதான் கன்றுகளுக்கு சரியாக நீர் கிடைக்கும். செடிகள் நன்றாக செழித்து வளரவும் ஆரம்பிக்கும். நடவு செய்த மூன்றாவது மாதத்தில் செடிகளில் இருந்து பிஞ்சுகள் வரத்தொடங்கும். இந்தப் பிஞ்சுகளை விற்பனை செய்யாமல் கிள்ளிப் போட்டுவிடுவேன். இதற்குக் காரணம் 6 மாதம் ஆன செடிகளின் தண்டுப்பகுதி மிகவும் மெல்லியதாக இருக்கும். காய்களின் பாரம் தாங்காமல் செடி கீழே சாய்ந்துவிடும். இதுபோல் விழுந்துவிடக் கூடாது என்பதற்காகவும், செடிகள் நன்றாக வளர வேண்டும் என்பதற்காகவும் இவ்வாறு செய்வோம். காய்கள் மட்டுமில்லாமல் செடியின் நுனியையும் கிள்ளிவிடுவோம். இப்படி கிள்ளி விடுவதன் மூலம் அதிகப்படியான பக்கக் கிளைகள் தோன்றும்.
நான் இயற்கை முறையில் சாகுபடி செய்வதால் பூச்சித் தாக்குதல் அதிகம் இருப்பதில்லை. ஆடு, கோழிகளையும் அத்தித் தோட்டத்தில் வளர்த்து வருகிறேன். இவை செடிகளைத் தாக்கும் பூச்சிகளை கொத்தி தின்றுவிடும். அத்திப்பழச் செடிகளின் இலைகளில் பால் இருப்பதால் கோழி, ஆடுகள் இவற்றை சாப்பிடாது. ஆனால் செடிகளுக்கு இடையில் வளரும் களைகளையும், புற்களையும் ஆடுகள் சாப்பிட்டுவிடும். ஆட்டின் சிறுநீரும், அதன் புழுக்கையும் நிலத்திற்கு நல்ல ஊட்டத்தைக் கொடுக்கும். செடிகளுக்கு நல்ல உரமாகவும் இருக்கும்.இலைகளில் மட்டும் புழுக்கள் வரக்கூடும். இந்தப் புழுக்களைக் கட்டுப்படுத்த மாட்டுக் கோமியம், புகையிலை, காதி சோப் ஆகியவற்றை ஒரு நாள் இரவு முழுக்க ஊற வைத்துவிடுவேன். பிறகு இதனை தண்ணீருடன் கலந்து செடிகள் ஈரமாகும் அளவிற்கு ஸ்பிரே செய்வோம். இந்தக் கலவையின் வாசத்திற்கு புழுக்கள் வராது. இது போக மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அத்திக்கு எருவுரம் கொடுத்துக்கொண்டே இருப்போம். நிலத்திற்கு காய்ச்சலும் பாய்ச்சலுமாக சொட்டு நீர் பாசனம் மூலம் நீர் பாய்ச்சினால் மட்டும் போதும். எங்கள் தோட்டத்தை வந்து பார்ப்பவர்கள் அனைவரும் கேட்கும் ஒரே கேள்வி என்ன தெரியுமா? அத்தி மரம்தானே? எப்படி நீங்கள் மட்டும் செடியாய் வைத்திருக்கிறீர்கள்? என்பதுதான்.
நாங்கள் கவாத்து செய்து வளர்ப்பதால் அத்தி செடியாகவே இருக்கிறது. இதன்மூலம் பெரிய பழங்களாக நாங்கள் அறுவடை செய்கிறோம். பின்னர் எட்டாவது மாதத்தில் செடியில் இருந்து மீண்டும் பழங்கள் வரத்தொடங்கிவிடும். இந்தப் பழங்களைத்தான் நாங்கள் விற்பனை செய்வோம். ஒவ்வொரு செடியிலும் ஒரு அறுவடையில் கிட்டத்தட்ட 4.75 கிலோ அத்திப்பழம் கிடைக்கும். ஒரு கிலோ பழத்தை ரூ.200 என்ற கணக்கில் விற்பனை செய்வோம். பழங்களை நாங்கள் உலர்த்தாமல் நேரடியாக வியாபாரிகளுக்கு விற்பனை செய்துவிடுகிறோம். ஒரு ஏக்கருக்கு எங்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு 4038 கிலோ அத்திப்பழம் மகசூலாக கிடைக்கிறது. அப்படி பார்க்கையில் ஒரு ஏக்கருக்கு அத்திப்பழத்தில் இருந்து ரூ.8,07,600 வருமானமாக கிடைக்கிறது. இதில் செலவுகள் ரூ.65,000 போக ரூ.7,42,600 லாபமாக கிடைக்கிறது. என்னுடைய அனுபவத்தில் சொல்கிறேன் இயற்கை முறையில் விவசாயம் பார்த்தால் மட்டுமே இந்த மகசூல் சாத்தியம். மேலும், ஆரோக்கியமான சத்தான அத்திப்பழமும் கிடைக்கும். இதேபோல் இரண்டு வருடத்தில் மூன்று முறை அறுவடை செய்வேன். ஒவ்வொரு செடிக்கும் அறுவடைக் காலம் மாறுபடும். இதனால் அத்திப்பழத்தை விற்பனை செய்வதற்கு நாங்கள் பெரிதாக சிரமப்படுவது கிடையாது’’ என்கிறார்.
தொடர்புக்கு:
சுரேஷ்குமார்: 99943 48483
The post அத்திவாக்கத்தைக் கலக்கும் அத்தி சாகுபடி! appeared first on Dinakaran.