சென்னை: அண்ணாசாலையில் கர்ப்பிணியை இடிப்பது போல் சென்றதை கண்டித்த வாடிக்கையாளரை, ஹெல்மெட்டால் தாக்கிய ரேபிடோ டிரைவரை போலீசார் கைது செய்தனர். நுங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்த ராஜசேகர் (28), நேற்று முன்தினம் மதியம் திருவல்லிக்கேணியில் இருந்து நுங்கம்பாக்கம் செல்ல பைக் டாக்சி (ரேபிடோ) ஆன்லைனில் பதிவு செய்தார். சிறிது நேரத்தில் கிதியோன் (36) என்பவர், இருசக்கர வாகனத்துடன் வந்து, ராஜசேகரை ஏற்றிக் கொண்டு நுங்கம்பாக்கம் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, ரேபிடோ டிரைவர் வாகனத்தை அதிவேகமாக தாறுமாறாக இயக்கியுள்ளார். குறிப்பாக, அண்ணாசாலை தபால் நிலையம் அருகே சென்ற போது, சாலையை கடந்த கார்ப்பிணியை இடிப்பது போல் சென்றுள்ளார். இதனால் கோபமடைந்த ராஜசேகர், ரேபிடோ டிரைவரிடம் வாகனத்தை நிறுத்த சொல்லி, உன்னுடைய ரைடை கேன்சல் ெசய்கிறேன் என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரேபிடோ டிரைவர் கிதியோன், ராஜசேகருடன் தகராறில் ஈடுபட்டு, ஹெல்மெட்டால் கடுமையாக தாக்கியுள்ளார்.
இதை பார்த்து, பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் மற்றும் பொதுமக்கள் கிதியோனை பிடித்து சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் ராஜசேகர் அளித்த புகாரின்படி ரேபிடோ டிரைவரான ராயபுரம் அப்பையர் லேன் பகுதியை சேர்ந்த கிதியோனை பிடித்து விசாரணை நடத்திய போது, அவர் மீது 2 திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் கிதியோனை கைது செய்தனர்.
The post அதிவேகமாக சென்றதை கண்டித்த வாடிக்கையாளரை தாக்கிய ரேபிடோ டிரைவர் கைது appeared first on Dinakaran.