சென்னை: தங்கம் விலை நேற்று அதிரடியாக உயர்ந்து பவுன் மீண்டும் 73 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்த வாரத்தில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1520 உயர்ந்ததால் நகை வாங்குவோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதே நேரத்தில் வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கம் விலை இந்தாண்டு தொடக்கத்தில் இருந்தே யாரும் எதிர்பார்க்காத வகையில் உயர்ந்த வண்ணம் இருக்கிறது. பல்வேறு நாடுகளுக்கு இடையே திடீரென ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாகவும் தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து பின்னர் கணிசமாக குறைந்தது.
அந்த வகையில், கடந்த மாதம் 14ம் தேதி வரலாறு காணாத வகையில் தங்கம் விலை உயர்ந்தது. அன்றைய தினம் தங்கம் விலை பவுன் ரூ.74,560க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை பதிவு செய்தது. அதன் பின்னர் தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,075க்கும், பவுனுக்கு ரூ.440 உயர்ந்து ஒரு பவுன் ரூ.72,600க்கும் விற்பனையானது.
வார இறுதி நாளான நேற்று தங்கம் விலை மேலும் அதிரடி உயர்வை சந்தித்தது. அதாவது, நேற்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,140க்கும், பவுனுக்கு ரூ.520 உயர்ந்து ஒரு பவுன் ரூ.73,120க்கும் விற்பனையானது. அதே நேரத்தில் இந்த வாரத்தில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,520 வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் வெள்ளி விலையும் நேற்று அதிரடியாக உயர்ந்தது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 125 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஐந்தாயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை. அதனால், தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படாது. நேற்றைய விலையில் இன்று தங்கம் விற்பனையாகும். நாளை திங்கட்கிழமை மார்க்கெட் தொடங்கிய பின்னரே தங்கம் விலையில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்பது தெரியவரும்.
The post அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை பவுன் மீண்டும் ரூ.73 ஆயிரத்தை தாண்டியது: இந்த வாரத்தில் மட்டும் ரூ.1,520 எகிறியது, வெள்ளி விலையும் புதிய உச்சம் appeared first on Dinakaran.