
திருவாரூர்,
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக திருவாரூருக்கு நேற்று மதியம் வருகை தந்து காட்டூரில் உள்ள கலைஞர் கோட்டத்துக்கு சென்று சிறிது நேரம் தங்கி ஓய்வெடுத்தார். மாலையில் ரோடு ஷோ மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களை சந்தித்து மனுக்களை பெற்றார்.
இன்று(வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு திருவாரூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள எஸ்.எஸ்.நகரில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, முடிவுற்ற புதிய திட்டப்பணிகள் திறப்பு விழா, புதிய திட்டப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ரூ.846 கோடி மதிப்பில் பல்வேறு துறைகளில் 1,234 முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தும், பல்வேறு துறைகளில் 2,423 புதிய திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டியும், 67,181 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
அதன்பின்னர் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
திருவாரூர் மாவட்ட மக்கள் அனைவருமே "எங்களில் ஒருவன்" என என்னை அன்போடு அழைக்கிறார்கள். திருவாரூர் என்றாலே தேரும், கலைஞரும்தான் நினைவுக்கு வருவார்கள். இம்மண்ணில் பிறந்த கலைஞர் தான் தொட்ட துறைகளில் வெற்றி பெற்று தமிழ்நாட்டை முன்னேற்றினார். கலைஞர் கருணாநிதி ஆட்சியின் நீட்சிதான் இந்த திராவிட மாடல் ஆட்சி.
அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் செயல்பாட்டால் தொழில்துறை தலைநிமிர்ந்து நிற்கிறது. செய்தி சேனல்கள் வளர்ச்சியை டி.ஆர்.பி.யை வைத்து கணிப்பார்கள், அதேபோல் தமிழ்நாடு அரசின் தொழில்துறை வளர்ச்சியை டி.ஆர்.பி.ராஜாவின் செயல்பாட்டை வைத்து கணிக்கலாம். தமிழ்நாட்டை நோக்கி ஏராளமான தொழிற்சாலைகள் வருகின்றன; வேலைவாய்ப்பு பெருகுகிறது; அனைத்து மாவட்டங்களும் தொழில் வளர்ச்சி நிறைந்த மாவட்டங்களாக மாறுகின்றன.
அதிமுகவை மீட்க முடியாத எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டை மீட்போம் என பயணம் செய்கிறார். ஆட்சிக்கு கொண்டு வந்தவருக்கே துரோகம் செய்தவர் பழனிசாமி; செய்த குற்றங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள தமிழ்நாட்டை பாஜகவிடம் அடகு வைத்தார். எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து தமிழ்நாடு ஏற்கெனவே மீட்கப்பட்டு விட்டது. திராவிட மாடல் ஆட்சியில் தலைநிமிர்ந்த தமிழ்நாட்டை வளர்த்தெடுத்திருக்கிறோம்.
பாஜகவின் டப்பிங் வாய்சில் பேசிக் கொண்டிருந்த எடப்ப்பாடி பழனிசாமி ஒரிஜினல் வாய்சில் பேசுகிறார். கோவில் நிதியில் கல்லூரி திறக்கக் கூடாது என பாஜக தலைவர்களே பேசுவதில்லை; ஆனால் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். படிப்பு என்றால் அவருக்கு ஏன் இவ்வளவு கசக்கிறது?. சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொண்டு கலைஞர் பல்கலைக் கழகத்தை அமைப்போம்; துரோகம் செய்துவிட்டு என்ன பயணம் செய்தாலும் மக்கள் ஏற்க மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
அதனை தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்திற்கு 6 புதிய அறிவிப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
▪️ திருவாரூர் நகர்ப் பகுதியில் நவீன வசதிகளுடன் குடிய புதிய வணிக வளாகம்
▪️ நன்னிலம் பகுதியில் ரூ.56 கோடி மதிப்பீட்டில் மாதிரிப் பள்ளி தொடங்கப்படும்
▪️ மன்னார்குடியில் ரூ.18 கோடி மதிப்பீட்டில் அரசு மகளிர் கல்லூரி தொடங்கப்படும்
▪️ திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாய்க்கால், ஆறுகள் புனரமைக்கப்படும்
▪️ பூந்தோட்டம் புறவழிச்சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்
▪️ பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாத்த நெல் ஜெயராமனுக்கு திருத்துறைப்பூண்டியில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும்.