அதிமுக நிர்வாகி மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு

3 months ago 23

கள்ளக்குறிச்சி: நாடாளுமன்றத் தேர்தலின் போது விழுப்புரம் தனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுவதற்காக உளுந்தூர்பேட்டையை சேர்ந்த அதிமுக எம் ஜி ஆர் இளைஞர் அணி செயலாளர் வழக்கறிஞர் கிருஷ்ணன் என்பவர் அதிமுக தலைமையிடம் விருப்பமனு அளித்திருந்தார். இந்த நிலையில் விழுப்புரம் தனி தொகுதியில் அதிமுக சார்பில் காந்தலவாடி பாக்யராஜ் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்த நிலையில் வழக்கறிஞர் கிருஷ்ணன் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில் கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக செயலாளரும், உளுந்தூர்பேட்டை முன்னாள் எம்எல்ஏவுமான குமரகுரு, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவதாக கூறி ரூ.1.60 கோடி பணம் பெற்றுக் கொண்டு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை.

அந்தப் பணத்தை திரும்ப கேட்பதற்காக அவரது வீட்டிற்கு சென்ற போது என்னை அசிங்கமாக திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தனது உயிருக்கு குமரகுரு மற்றும் அவரது மகன் நமச்சிவாயம் ஆகியோர் மூலம் ஆபத்து உள்ளதாக தெரிவித்து இருந்தார். இந்த புகாரை தொடர்ந்து வழக்கறிஞர் கிருஷ்ணனை அதிமுகவிலிருந்து நீக்கி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டிருந்தார். இதற்கிடையே புகார் மனு அடிப்படையில் குமரகுரு மீது அசிங்கமாக திட்டி தாக்குதல், கொலை மிரட்டல் விடுத்தல், வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post அதிமுக நிர்வாகி மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு appeared first on Dinakaran.

Read Entire Article