சென்னை: அதிமுக ஆட்சியில் செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறந்துவிட்டதால் 250 பேர் பலியான விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் – எடப்பாடி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கு மனித தவறே காரணம் எனவும் முதல்வர் குற்றம் சாட்டினார். சட்டப்பேரவையில் நேற்று நேரமில்லா நேரத்தில் போளூர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி (அதிமுக) பேசும்போது, “கடந்த 2ம் தேதி சாத்தனூர் அணையில் இருந்து முன் அறிவிப்பு இன்றி தண்ணீர் திறந்துவிடப்பட்டதால்…” என்றார். அப்போது, இடைமறித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “முன்னறிவிப்பு இன்றி தண்ணீர் திறக்கப்பட்டதாக உறுப்பினர் இங்கே கூறுகிறார். 5 முறை முன்னறிவிப்பு செய்த பிறகே தண்ணீர் திறக்கப்பட்டது” என்றார்.
அக்ரி கிருஷ்ணமூர்த்தி: கடந்த 2ம் தேதி தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டது. வீடுகள், விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டன. கால்நடைகள் இறந்துபோய் உள்ளன. எனவே, அதற்கான நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும். மேம்பாலம் ஒன்றும் இடிந்து சேதமடைந்துள்ளது. உடனடியாக தற்காலிக பாலம் அமைக்க வேண்டும்.
குமாரபாளையம் பி.தங்கமணி (அதிமுக): வங்கக்கடலில் பெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் முன்கூட்டியே தமிழக அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பலருக்கும் உணவு, தண்ணீர் கிடைக்கவில்லை. இதுபோன்ற ஒரு நிலையில்தான் 2015ம் ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரியில் 29 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. ஆனால் ஒரு லட்சம் கன அடி என்று தவறான தகவல் பரப்பப்பட்டது. தற்போது சாத்தனூர் அனையில் இருந்து 2.7 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. முன்கூட்டியே தகவல் சொல்லியிருந்தால், இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டு இருக்காது.
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்: மழை வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகளிடம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முதல்வர் அறிவுறுத்தி இருந்தார். தென்பெண்ணை ஆற்றில் முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டுதான் தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் சென்னை செம்பரம்பாக்கத்தில் முன்கூட்டியே அறிவிக்காமல் தண்ணீர் திறக்கப்பட்டதால் தான் பல உயிரிழப்புகள் ஏற்பட்டது.
எடப்பாடி பழனிசாமி (எதிர்க்கட்சி தலைவர்): கடந்த 2ம் தேதி அதிகாலை 2.45 மணிக்கு சாத்தனூர் அணை திறப்பது குறித்து அறிவிப்பு வெளியிட்டுவிட்டு, அதிகாலை 3 மணிக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. ஆனால் அதிமுக ஆட்சியில் காலத்தில் செம்பரம்பாக்கத்தில் ஒரே நேரத்தில் 29 ஆயிரம் கன அடி தண்ணீர் மட்டுமே திறக்க முடியும். ஆனால் ஒரு லட்சம் கன அடி தண்ணீர் திறந்ததாக தவறான தகவல் பரப்பப்படுகிறது. செம்பரம்பாக்கம், அதை சுற்றியுள்ள 100 ஏரிகளில் இருந்து உபரி நீர் அடையாற்றில் கலந்ததால் தான் பாதிப்பு அதிகமாக இருந்தது.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: செம்பரம்பாக்கம் ஏரியை திறந்ததை குறை சொல்லவில்லை. சொல்லாமல் திறந்ததால்தான் பாதிப்பு அதிகமாக இருந்தது. 250 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆனால், சாத்தனூர் அணை முன் அறிவிப்பு விடுக்கப்பட்டு தண்ணீர் திறக்கப்பட்டபோது 5 பேர் தான் இறந்து போனார்கள். செம்பரம்பாக்கம் ஏரி திறந்தது மனித தவறு என்று இந்திய கணக்கு ஆய்வு அறிக்கை தெளிவாக சொல்லி இருக்கிறது.
எடப்பாடி பழனிசாமி: அடையாற்றில் செம்பரம்பாக்கம் ஏரியுடன் 100 ஏரிகளின் உபரி நீர் கலந்ததால்தான் பாதிப்பு அதிகமாக இருந்தது.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: யாருக்கும் சொல்லாமல் ஏரியை திறந்ததால்தான் இவ்வளவு மனித உயிரிழப்புகள் ஏற்பட்டது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து எவ்வளவு அடி தண்ணீர் திறப்பது என்பது பிரச்னை இல்லை. திறப்பதற்கு யாரிடம் அனுமதி பெற வேண்டும் என்று தெரியாமல் இருந்ததுதான் பிரச்னை.
எடப்பாடி பழனிசாமி: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 29 ஆயிரம் கன அடி நீர் தான் வெளியேறியது. இதனால் எப்படி பாதிப்பு ஏற்படும்?
முதல்வர் மு.க.ஸ்டாலின்: வாழைப்பழ கதை மாதிரி பேசுகிறீர்கள். ஆடிட்டிங் ரிப்போட்டில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. நான் எதுவும் சொல்லவில்லை. 2018ம் ஆண்டு நீங்கள் (எடப்பாடி) சட்டப்பேரவையில் தாக்கல் செய்த சிஏஜி அறிக்கையில்தான் இது கூறப்பட்டுள்ளது. (அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் சிஏஜி புத்தகத்தை சட்டப்பேரவையில் உயர்த்தி காட்டினார்).
அமைச்சர் மா.சுப்பிரமணியன்: பொறியாளர்கள், ஐஐடி நிபுணர்கள் அழைத்து அடையாற்றை பார்வையிட தயாரா? அங்கு 29 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்தாலே 7 தொகுதிகளில் கரையோரம் மக்கள் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள். அப்போது பாராளுமன்றத்தில் பேசிய ஒன்றிய அமைச்சரே, தமிழக மழை வெள்ள உயிர் சேதத்துக்கு மனித தவறே காரணம் என்று கூறியிருக்கிறார்.
அமைச்சர் சேகர்பாபு: 45 ஆண்டுகளுக்கு மேல் அடையாற்றில் நாங்கள் வெள்ள பாதிப்பை பார்க்கிறோம். செம்பரம்பாக்கம் ஏரியை முன்னறிவிப்பு இல்லாமல் திறந்ததால்தான் 250 பேர் இறந்தார்கள். தூங்குபவர்களை எழுப்பலாம். ஆனால் தூங்குபவர்கள் போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது.
அமைச்சர் தா.மோ.அன்பரசன்: செம்பரம்பாக்கம் ஏரிக்கும் அடையாற்றுக்கும் இடையே எந்த எரியும் கிடையாது. அப்படியிருக்கும்போது 100 ஏரிகளில் இருந்து அடையாற்றில் எப்படி தண்ணீர் கலக்க முடியும். யாருக்கும் சொல்லாமல் திறக்கப்பட்டதால்தான் 250 உயிரிழப்புகள் ஏற்பட்டது.இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
* தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைப்பு
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இரண்டு நாட்கள் (9 மற்றும் 10ம் தேதி) நடந்தது. சட்டப்பேரவையின் கேள்வி நேரம் தொடங்கியதும் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதில் அளித்து வந்தனர். குறிப்பாக மதுரை டங்ஸ்டன் சுரங்கம், சாத்தனூர் அணை திறப்பு மற்றும் அதானி விவகாரம் ஆகிய முக்கிய விவகாரங்கள் சட்டப்பேரவையில் கடந்த இரண்டு நாட்கள் நடந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. இந்நிலையில், கடந்த 2 நாட்களாக கூட்டத்தொடர் நடந்து வந்த நிலையில், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
The post அதிமுக ஆட்சியில் செம்பரம்பாக்கம் ஏரியை திறந்துவிட்டதால் 250 பேர் பலியான விவகாரம் பேரவையில் மு.க.ஸ்டாலின், எடப்பாடி கடும் வாக்குவாதம்: மனித தவறே காரணம் எனவும் முதல்வர் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.