சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு மாநில தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் நேற்று வெளியிட்ட அறிக்கை: 2021ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு சொன்னபடியே தமிழ்நாட்டு மக்களுக்கு விடியலைத் தந்திருக்கிறது. 4 ஆண்டுகளை கடந்து 5வது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் நிலையில், திமுக அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடைந்துள்ளன என்பதை எவராலும் மறுக்க முடியாது.
கடன் வசூலிக்கும் போது மனித உரிமைகள் பெருமளவில் பாதிக்கப்படுவது வாடிக்கையாக இருந்தது. இந்தப் பிரச்னைக்கு மணி கட்டியிருக்கிறார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். நம் மண்ணின் ஆதிக்குடிகளை இழிவு செய்யும் அடையாளமாக உள்ள ’காலனி’ எனும் சொல் அரசு ஆவணங்களில் இருந்தும் பொதுப் புழக்கத்திலிருந்தும் நீக்கப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பு வரவேற்கக்கூடியது.
நாட்டிலேயே தமிழ்நாட்டை முதல் மாநிலமாக மாற்றிக் கொண்டிருக்கும் திராவிட மாடல் அரசைப் பார்த்து, பாஜவின் எடுப்பார் கைப்பிள்ளையாக மாறிவிட்ட எடப்பாடிக்கு விமர்சிக்க தகுதியோ, அருகதையோ கிடையாது.
கஞ்சா, போதை கடத்தலுக்கு வித்திட்டதே எடப்பாடி தலைமையிலான அதிமுக ஆட்சியில் தான். இன்றைக்கு அவற்றைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கும் முதல்வரை பார்த்து கேள்வி எழுப்ப எடப்பாடி பழனிசாமிக்கு என்ன தகுதி இருக்கிறது?. பொள்ளாச்சி பாலியல் சம்பவம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, சாத்தான்குளம் இரட்டை கொலை என இன்றைக்கும் மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தும் கொடுமைகளுக்குச் சொந்தக்காரர் எடப்பாடிதானே?. அமைதிப்பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டில் குழப்பம் ஏற்படுத்த அணிவகுத்து வருகிறார்கள். எத்தனை பேர் வந்தாலும், அவர்களை தமிழ்நாட்டு மக்கள் முற்றிலும் புறக்கணிப்பார்கள்.
The post அதிமுக ஆட்சியில் அவலநிலையை ஏற்படுத்திய எடப்பாடிக்கு முதல்வரை பார்த்து கேள்வி எழுப்ப என்ன அருகதை இருக்கிறது: காங்கிரஸ் எஸ்சி துறை தலைவர் கேள்வி appeared first on Dinakaran.