அதிபர் டிரம்ப் அடுத்த போப்? வைரலான நகைச்சுவை பதில்

2 weeks ago 3

நியூயார்க்: அடுத்த போப்பாக இருக்க விரும்புவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் நகைச்சுவையாக பதிலளித்திருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. போப் பிரான்சிஸ் மறைவைத் தொடர்ந்து புதிய போப்பை தேர்வு செய்தற்கான கர்தினால்கள் மாநாடு வாடிகனில் வரும் 7ம் தேதி தொடங்க உள்ளது. போப் பிரான்சிசின் இறுதிசடங்கில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்று விட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது.

அப்போது ஒரு நிருபர், ‘‘அடுத்த போப்பாக யார் இருக்க வேண்டும்’’ என்று கேட்டார். இதற்கு பதிலளித்த அதிபர் டிரம்ப், ‘‘நானே போப் ஆக இருக்க விரும்புகிறேன். எனவே முதல் தேர்வு நானே’’ என நகைச்சுவையாக கூறினார். பின்னர் டிரம்ப், ‘‘எனக்கு விருப்பமில்லை. நியூயார்க்கிலும் ஒரு கர்தினால் உள்ளார். அவர் மிகவும் நல்லவர். எனவே, என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்’’ என்றார். டிரம்பின் இந்த நகைச்சுவை பதில் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

அவரது கருத்துக்கு கலவையான கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. டிரம்பின் ஆதரவாளர்கள் பலரும் டிரம்ப் படத்திற்கு போப் அங்கியை மார்பிங் செய்து அழகு பார்க்கின்றனர். டிரம்பின் தீவிர ஆதரவாளரான அவரது கட்சியை சேர்ந்த செனட்டர் லிண்ட்சே கிரஹாம், ‘‘இதுவரை அமெரிக்காவிலிருந்து யாரும் போப் ஆனதில்லை. முதல் போப்-அமெரிக்க அதிபர், இது நல்ல கலவை. இதை கர்தினால்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்’’ என கிண்டலடித்துள்ளார். அடுத்த போப் தேர்வில், நியூயார்க் கர்தினால் திமோதி டோலன் முக்கிய போட்டியாளராக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

The post அதிபர் டிரம்ப் அடுத்த போப்? வைரலான நகைச்சுவை பதில் appeared first on Dinakaran.

Read Entire Article