சென்னை,
சென்னையை அடுத்த மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழகத்தில் இந்திய இறகுப்பந்து கழகம் சார்பில் அகில இந்திய சப்ஜூனியர் இறகுப்பந்து போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கேரளா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 600 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு மாநில இறகுப்பந்து கழக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோப்பைகளை வழங்கி கவுரவித்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழக அரசிடம் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதற்கான அதிகாரம் இருக்கிறது. ஆனால் அதிகாரத்தை பயன்படுத்த தமிழக அரசுக்கு மனமில்லை.
வெள்ளம் வந்தால் மத்திய அரசுதான் நிதி கொடுக்க வேண்டும், சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசுதான் நடத்த வேண்டும், மதுவிலக்கை மத்திய அரசுதான் கொண்டு வர வேண்டும் என எல்லாவற்றையும் மத்திய அரசுதான் செய்ய வேண்டும் என்றால் இவர்கள் என்னதான் நிர்வாகம் நடத்துகிறார்கள்?"
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.