‘‘கோயில் நில மோசடியில் சிக்கியவருக்கு அமைச்சர் பதவி வழங்கி தாமரை அழகு பார்ப்பது ஏன் என்று விமர்சனம் எழுந்திருக்காமே..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘ஆன்மிக பூமியான புதுச்சேரியில் தாமரையில் கோஷ்டி பூசலுக்கு முடிவு காண அமைச்சரவை மாற்றம் நடந்ததாம்.. ஒரு குமார் மாற்றப்பட்டு, மற்றொரு முழம் குமாருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாம்.. முதலில் மறுத்த முழம் குமாரானவர், ஒருவழியாக பதவியேற்பு விழாவுக்கும் தயாராகி விட்டாராம்.. நிலைமை இப்படியிருக்க தாமரை கட்சி மீதான அரசியல் விமர்சனமோ புதுச்சேரியில் மேலும் மேலும் அதிகரித்தபடி உள்ளதாம்..
மக்கள் மத்தியிலும் பேசும்ெபாருள் ஆகிவிட்டதாம்.. பிரசித்தி பெற்ற கோயில் நில மோசடியில் சிக்கிய முழம் குமாருக்கு, கோயில்களையும் அதன் உடைமைகளையும் பாதுகாப்போம் என தம்பட்டம் அடிக்கும் தாமரையை, அமைச்சராக்கி அழகு பார்ப்பது ஏன் என்ற விமர்சனம் எழுந்துள்ளதாம்.. கோயில் நிலங்களை அபகரித்தவருக்கு பதவி கொடுப்பதுதான் தாமரையின் பாதுகாப்பு பணியா என்ற கேள்வியை எதிர்தரப்பான கை ஆருடமாக்கி இருக்கிறதாம்.. அதிலும் முதன்மை சாமியானவருக்காக பதவியை துறந்து இடத்தை விட்டுக் கொடுத்தவரே பொதுவெளியில் பகிரங்கமாக இதை பரப்ப முழம்குமார், அப்செட் ஆகி நெல்லிவாசிகளிடம் புலம்பி வருகிறாராம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தனிப்பிரிவு காக்கிகளை டிரான்ஸ்பர் செய்து அதிரடி காட்டின அதிகாரியால் வடக்கு மண்டல காக்கிகள் கலக்கத்தில் இருக்கிறார்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.‘‘கிரிவல மாவட்டத்தில் பணிபுரிந்த தனிப்பிரிவு போலீசாரை, ஒட்டுமொத்தமாக வெளி மாவட்டங்களுக்கு டிரான்ஸ்பர் செய்த சம்பவம் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்குதாம்.. போலீஸ் ஸ்ேடஷன்களில் நடக்கும் வழக்கு தொடர்பான விவரங்கள, ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நடைபெறும் சட்டம் -ஒழுங்கு பிரச்னைகள் உள்ளிட்ட முக்கிய தகவல்களை மாவட்ட காவல்துறைக்கு தகவல் அளிக்கும் நம்பகமான பணி தனிப் பிரிவுக்குரியது..
ஆனால், சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்களுடன் ரகசிய கூட்டணி அமைத்துக்கொண்டு, சரியான தகவல்களை அளிக்காமல் சிலர் தவறுகளில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலால் அதிர்ச்சியடைந்த வடக்கு மண்டல அதிகாரி, கடந்த சில மாதங்களாகவே தனக்கு நம்பிக்கைக்குரிய போலீஸ் அதிகாரிகள் மூலம் கிரிவலம் மாவட்டத்துல விசாரணையை நடத்தினாராம்.. அப்போது, தனிப்பிரிவு போலீசாரின் செயல்பாடுகள் திருப்தியில்லை என தெரியவந்ததாம்..
அதனால், அதிர்ச்சியடைந்த வடக்கு மண்டல அதிகாரி, ஒட்டுமொத்த தனிப்பிரிவு காக்கிகளையும் வெளி மாவட்டங்களுக்கு அதிரடியாக டிரான்ஸ்பர் செய்துவிட்டாராம்.. அதோடு, ஒரு ஸ்டேஷனுக்கு 2 தனிப்பிரிவு போலீஸ் பணியில் இருந்த நிலையை மாற்றி, ஒருவர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளாராம்.. மற்றொரு நபரை நேரடியாக நியமிக்காமல், கிராஸ் செக் செய்வதற்காக தேர்வு செய்திருக்கிறாராம் அதிகாரி. இதனால் கிரிவலம் மாவட்ட காக்கிகள் மட்டுமில்லாமல், வடக்கு மண்டலமே கலக்கத்தில் இருகிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘அதிகாரத்தை குறைக்கப் போறதை அறிந்து தெர்மாகோல்காரர் புலம்புவதும், பதவியை கைப்பற்ற மலராத கட்சியில் இருந்து தாவியவர் துடியாக துடிப்பதும் எங்கே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘தூங்கா நகரத்து இலைக்கட்சிக்கு மாவட்ட முக்கிய பொறுப்பில் புதிய நிர்வாகிள் நியமிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்காம்..
ஏற்கனவே இங்கு நிர்வாக ரீதியாக 3 மாவட்டங்கள் செயல்படுகிறதாம்.. நகருக்கு மாஜி தெர்மாகோல்காரரும், புறநகருக்கு மாஜி உதயமானவரும், செல்லமானவரும் இருக்கிறாங்க.. 2026 சட்டமன்ற தேர்தலை முன்வைத்து நகர் பொறுப்பை மாற்றம் செய்வது அல்லது இரண்டாக பிரிப்பது என சேலத்துக்காரர் முடிவு செய்துள்ளாராம்.. தெர்மாகோல்காரர் என்னதான் தனது தீவிர ஆதரவாளராக இருந்தாலும், அவரது செயல்பாடுகளால் சேலத்துக்காரர் தரப்பு அதிருப்தியில்தான் உள்ளதாம்..
ஒன்று தெர்மாகோல்காரரை மாற்றுவது அல்லது 2 ஆக பிரித்து அவரது அதிகாரத்தை குறைப்பது என்ற முடிவுக்கு சேலத்துகாரர் வந்து விட்டாராம்.. விரைவில் அதற்கான அறிவிப்பை வெளியிட உள்ளதாக இலைக்கட்சி தரப்பில் பரபரப்பாக பேசப்படுது.. இந்த பதவியை கைப்பற்ற தாமரையில் இருந்து இலைக்கு தாவிய மருத்துவர் ஒருவர் துடியாய் துடிக்கிறாராம்.. அதே நேரம் தலைமையின் மன மாற்றத்துக்கு புறநகர் மாஜியும், மருத்துவரும்தான் காரணமென தனது அடிபொடிகளிடம் தெர்மகோல்காரர் புலம்பி வருகிறாராம்.. ஏற்கனவே, பண்ணை வீட்டில் பல கோடி கொள்ளை விவகாரத்தில் அதிர்ச்சியில் உறைந்துள்ள இவருக்கு, தலைமையின் முடிவு மேலும் மன உளைச்சலை கொடுத்து இருக்காம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தமிழக தாமரையின் புது தலைவர் தொகுதி மாறும் யோசனையில் இருக்கிறாராமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில் கூட்டல், கழித்தல் கணக்குகளும் நடக்க தொடங்கி உள்ளது. அல்வா ஊரின் எம்எல்ஏ ஏற்கனவே இலைக்கட்சியிலிருந்து மலராத தேசிய கட்சிக்கு தாவியவர். தற்போது அந்த கட்சியின் சட்டமன்றக்குழு தலைவரும், மாநில தலைவரும் அவர் தான். கடந்த 2001 முதல் ஐந்து தேர்தல்களில் அல்வா ஊரின் சட்டமன்ற தொகுதியில் அவர் போட்டியிட்டுள்ளார்.
இதில் 2 முறை தோற்றுள்ள அவர், தற்போது 3வது முறையாக எம்எல்ஏ பதவி வகிக்கிறார். இந்த தொகுதியில் தொடர்ந்து 2 முறை அவர் வெற்றி பெற்றதில்லை. ஆரூடத்தில் மிகுந்த நம்பிக்கையுள்ள அவர், தற்போது எம்எல்ஏவாக இருப்பதால் மீண்டும் வெற்றிக்கனி கிடைக்குமா என தீவிர யோசனையில் ஆழ்ந்துள்ளராம். இதனால் தனது தொகுதியை இந்த முறை மாற்றிவிடலாமா என்ற கணக்கு அவரது மன ஓட்டத்தில் ஓட தொடங்கி உள்ளதாம். தற்போது மாநில தலைவர் என்ற முறையில், கூட்டணி கட்சிகளிடம் தொகுதிகளை கேட்கும் இடத்தில் இருப்பதால் தொகுதி மாறிவிடலாம் என்ற மூடுக்கு வந்துள்ளாராம். இது வொர்க்அவுட் ஆகுமா என தெரியவில்லை என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்..’’ என்றார் விக்கியானந்தா.
The post அதிகாரத்தை குறைக்கப் போவதை அறிந்து தெர்மாகோல்காரர் புலம்புவது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.