அதிகார வரம்பிற்கு உட்பட்டதில்லை மாஜி தலைமை நீதிபதி சந்திரசூட் மீதான ஊழல் வழக்கு தள்ளுபடி: லோக்பால் பரபரப்பு தீர்ப்பு

4 months ago 12

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மீதான ஊழல் புகாரை விசாரிக்கும் அதிகாரம் இல்லை என வழக்கை தள்ளுபடி செய்து லோக்பால் அமைப்பு தீர்ப்பளித்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த டி.ஒய்.சந்திரசூட் கடந்த நவம்பர் 10ம் தேதி ஓய்வு பெற்றார். அவர் அப்பதவியில் இருக்கும் போது, சந்திரசூட்டுக்கு எதிராக லோக்பால் அமைப்பில் ஊழல் புகார் தரப்பட்டது. கடந்த அக்டோபர் 18ம் தேதி தரப்பட்ட அப்புகாரில், ‘‘உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தனது பதவியை துஷ்பிரயோகம் செய்து, குறிப்பிட்ட அரசியல் தலைவர் மற்றும் கட்சிக்கு ஆதரவாகவும் பாதுகாக்கவும் லஞ்சம் பெற்று அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி உள்ளார்’’ என கூறப்பட்டது.

லோக்பால் தலைவர் நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் மற்றும் அதன் 5 உறுப்பினர்கள் குழு கடந்த 3ம் தேதி புகாரை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பில், ‘‘லோக்பால் சட்டத்தின் பிரிவு 14ன்படி, தலைமை நீதிபதி அல்லது உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு எதிரான ஊழல் வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் லோக்பால் அமைப்புக்கு இல்லை. பிரிவு 14ன் துணைப்பிரிவுகள் அனைத்தையும் முழுமையாக ஆய்வு செய்த பிறகே இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இந்த விவகாரத்தை மேற்கொண்டு நாங்கள் விசாரிக்க முடியாது. அதே சமயம் மனுதாரர் பிற சட்ட வழிகளில் தீர்வு காண முயற்சிக்கலாம்’’ என கூறப்பட்டுள்ளது.

 

The post அதிகார வரம்பிற்கு உட்பட்டதில்லை மாஜி தலைமை நீதிபதி சந்திரசூட் மீதான ஊழல் வழக்கு தள்ளுபடி: லோக்பால் பரபரப்பு தீர்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article