அதிகரிக்கும் தாக்குதல்

2 weeks ago 4

வெ ளி நாடுகளில் இந்தியர்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதுவரை இந்து கோயில்கள் மீது தாக்குதல் நடத்திக்கொண்டு இருந்தார்கள். இப்போது வெளிநாடு வாழ் இந்திய மக்கள் மீது கைவைக்கத் துணிந்து விட்டார்கள். கனடாவில் நடந்தது அந்த ரகம். சீக்கிய பிரிவினைவாதிகள் தான் இதற்கு காரணம் என்றாலும், இந்தியர்கள் மீது கைவைக்கும் நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் இன்றைய கோரிக்கை. பஞ்சாப் மாநிலத்தை மையமாக கொண்டு சீக்கியர்களுக்கு தனி நாடு வேண்டும் எனக் கோரி காலிஸ்தான் உள்ளிட்ட சில பிரிவினைவாத இயக்கங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன. அவர்களது கோரிக்கை போராட்ட வடிவில் இருந்து மாறி தற்போது வன்முறை வடிவிற்கு சென்றுவிட்டது. கனடா நாட்டில் வசித்து வந்த காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜார் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியிருந்தார். கனடாவின் உள்நாட்டு அரசியல் காரணமாகவே ஹர்தீப் சிங் கொலை செய்யப்பட்டிருப்பார். அவரது கொலைக்கும் இந்தியாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று இந்தியா தெளிவாக பதில் அளித்தது. இருப்பினும் கனடா மீண்டும் மீண்டும் அதே குற்றச்சாட்டை இந்தியா மீது முன்வைத்து வருகிறது. இந்த குற்றச்சாட்டின் அடுத்த கட்டமாக, காலிஸ்தான் பிரிவினைவாதிகள் மீது வன்முறை நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டதாக கனடா அமைச்சர் டேவிட் மோரிசன் குற்றம்சாட்டினார். இந்த குற்றச்சாட்டு உலக நாடுகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கனடாவின் இந்த குற்றச்சாட்டு அபத்தமானது, ஆதாரமற்றது என்று தெரிவித்துள்ள இந்திய அரசு, இந்த விஷயத்தில் கனடா தரப்பின் விளக்கத்தை தெரிவிக்குமாறு அந்நாட்டு தூதரக அதிகாரிக்கு சம்மன் அனுப்பி நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த சூழலில்தான் கனடாவில் பிராம்டன் பகுதியில் உள்ள இந்துக் கோயிலிலுக்குள் காலிஸ்தான் கொடியுடன் நுழைந்த பிரிவினைவாதிகள், அங்கு வழிபட்டுக்கொண்டு இருந்த இந்தியவம்சாவளியை சேர்ந்தவர்களையும், பக்தர்களையும் கடுமையாக தாக்குதல் நடத்தி உள்ளனர். பதிலுக்கு பக்தர்களும் தாக்க அங்கு மோதல் வெடித்து உள்ளது. இந்த திடீர் தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து கட்சியினரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். கனடாவில் இந்துக் கோயில்கள் மீது வேண்டும் என்றே திட்டமிட்டுத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை மிரட்டும் கோழைத்தனமான முயற்சிகள் நடந்து வருகின்றன என்று பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்து உள்ளார்.

காலிஸ்தான் ஆதரவாளர்களில் சில பிரிவினர் கனடாவில் தங்களுக்கான வாக்கு வங்கியை உருவாக்கியுள்ளனர். தற்போது ஆட்சியில் இருக்கும் அரசுக்கு பெரும்பான்மை பலம் இல்லை. இந்த சூழலில் காலிஸ்தான் பிரிவினைவாதிகளின் வாக்கு வங்கியைகுறிவைத்தே இந்தியர்கள் மீதும், இந்துகோயில்கள்மீதும் இதுபோன்ற தாக்குதல் நடப்பதாக கருத்து எழுந்துள்ளது. இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. இது, விசா கெடுபிடி, இந்திய மாணவர்களுக்கு நெருக்கடி என்றளவுக்கு நீண்டு கொண்டிருக்கிறது. கனடா மட்டுமல்ல, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் தற்போது இந்தியர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை காலிஸ்தான் பிரிவினைவாதிகள் செய்து வருகிறார்கள். இதை முளையிலேயே கிள்ளி எறியும் நடவடிக்கையில் ஒன்றிய அரசு உடனடியாக இறங்க வேண்டும்.

The post அதிகரிக்கும் தாக்குதல் appeared first on Dinakaran.

Read Entire Article